20 ஜனவரி 2013

"யாழ்ப்பாணமும்" உடைக்கட்டுப்பாடும்


முற்குறிப்பு -  இது ஒரு கட்டுரையல்ல என்னுடைய ஆதங்கம். விரும்பினால் தொடர்ந்து வாசியுங்கள் இல்லாவிட்டால் தயவுசெய்து வாசிக்காதீர்


அண்மையில் இணையத்தில் ஒரு செய்தியினை பார்க்கக்கிடைத்தது. “யாழில் குட்டைப் பாவாடைஅணியும் பெண்களுக்கு எச்சரிக்கை” என்ற தலைப்பிலேயே அந்த செய்தியினை பார்க்கமுடிந்தது. உள்ளே சென்று பார்த்தால் ஆங்கே ஆண்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இணையத்தளத்தில் செய்தியினைப்போட்டவன் பெண்களை மட்டும் குறிவைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது போலவாகவே தலைப்பினை அமைத்திருந்தான். இந்த செய்தியினை நான் பேஸ்புக்கில் பகிரும் போது “யாழில் இருக்கின்ற மனநோய் வியாதியுள்ள நாய்களில் சிலதுதான் இப்படியான சுவரொட்டியுடன் சம்பந்தப்பட்டிருக்கும்” என்று கூறியிருந்தேன்.

இந்த செய்தியைப்பார்த்தவுடன் எனக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்கள் உடைதொடர்பாக போட்டிருந்த சட்டங்களும் அந்தசட்டங்களை அமுல்படுத்தில விதமும்தான் நினைவுக்கு வந்தன. அதுவும் ஆண்களுக்குத்தான்  விசேடமாக உடைதொடர்பான கட்டுப்பாடுகள் அங்கே காணப்பட்டன. (வன்னியில் இருந்தவர்களை;தவிர எத்தனை பேருக்கு அப்படியான சட்டங்கள் அங்கு இருந்தனவென்று தெரியுமோ தெரியாது) ஏனென்றால் இந்த சட்டத்தால் என்னுடைய உறவுக்கார அண்ணா ஒருவர் நேரடியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஞாபகத்திற்கு வந்ததுதான் காரணம். இந்த சம்பவம் இடம்பெற்றது 2000ம் ஆண்டு காலப்பகுதி.
அதுவும் புதுக்குடியிருப்பில் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்திய “கானகன்” என்ற காவல்துறை உறுப்பினரைத்தான் எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது. எனக்கு உறவினர்முறையான ஒரு அண்ணாவின் அம்மா வவுனியா சென்று திரும்பிவரும்போது கொண்டுவந்த இருபக்;கமும் வெளிப்புறமாக பொக்கட்டுக்கள் உள்ள ஒரு நீளக்காற்சட்டையினையே (ஜீன்ஸ்) அவர் அன்று போட்டுக்கொண்டு வீதிக்கு வந்திருந்தார். அவருடன் நானும் செல்லும்போது வீதியில் நின்ற கானகன் இதைகண்டுவிட்டான். உடனேயே அண்ணாவை மறிச்சு பேசிவிட்டு தன்னிடம் இருந்த பிளேட் ஒன்றினால் வெளியில் இருந்த காற்சட்டை பொக்கட்டுக்களை வெட்டி எடுத்துவிட்டு இனி இப்படியான உடுப்பு போட்டால் உள்ளுக்கதான் இருக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்துவிட்டு அனுப்பினான். நாம் எதுவும் பேசமால் வாய்மூடி மௌனியாக சென்றுவிட்டோம். அன்று அந்த அண்ணா திருப்பி ஏதாவது கதைக்க போயிருந்தா “பற்பொடி தரேக்குள்ளதான் விடிஞ்சுட்டுது” என்று தெரிந்துகொள்ளும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கும்.


இவ்வாறு வன்னிக்குள் நாங்கள் இடம்பெயர்ந்து 6 வருடங்கள் இருந்தபோது விரும்பியோ விரும்பாமலோ வெளி உலகுடன் தொடர்பற்ற ஒரு மூடிய இறுக்கமான கட்டமைப்புக்குள் வாழவேண்டிய நிலையொன்று ஏற்பட்டது. அதனாலேயே 2003ம் ஆண்டு சமாதானப்பேச்சுவார்த்தை ஆரம்பித்து பாதை திறந்தவுடன் “யாழ்ப்பாணத் தமிழர்களகளாகிய” நாம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீண்டும் இராணுவக்கட்டுப்பாடான யாழ்ப்பாணத்திற்கு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. (போராளி, மாவீரர் குடும்பங்களை தவிர)


இதை நான் ஏன் இங்கு சொல்லுகின்றேன் ஏன்றால் சமூகப்பிரச்சனைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் ஆரம்ப காரணிகளை பிற்போக்குத்தனங்களை கண்டுபிடித்து அதை இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்காமல் இவ்வாறு போஸ்டர் அடித்து சமூகத்தை பயமுறுத்தி அதன் ஊடான காரியம் சாதிக்க நினைப்பது படுமுட்டாள்தனம். குட்டைப்பாவாடை அணிவதால்தான் அல்லது உள்ளாடை வெளியில் தெரிய போவதால்தான் யாழ்ப்பாணக் கலாச்சாரம்(?) அழிகின்றது என யாரும் நினைத்தாலே அவன் உண்மையிலேயே ஒரு மனநோய் வியாதி உள்ளவன்தான். இப்படியான மனநோய் வியாதி உள்ளவர்கள் இப்போது சமூகத்தில் அதிகரித்து செல்வது ஆரோக்கியமான விடயமல்ல.

ஏராளமான குப்பைகளை உள்ளே மூடிமறைத்துக்கொண்டு வெளியே போலியான ஒரு பொய் வாழ்க்கையினையே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த போலிப் பொய் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு எம்மத்தியில் இருக்கும் சமூகத்தில் இருக்கும் பிற்போக்குத்தனங்களை அதுவும் முதலில் தமது குடும்ப மட்டத்திலிருந்து அகற்ற முயற்சிசெய்யவேண்டும். அவ்வாறு செய்தாலே ஆரோக்கியமான சமூகம் ஒன்று எதிர்காலத்தில் தோன்றும்.

பிற்குறிப்பு : விடுதலைப் புலிகளைப்பற்றி சொல்லியிருக்கிறேன் யாழ்ப்பாணத்தைப்பற்றி புலம்பியிருக்கிறேன் ஆனா யாழில நிக்கிற ஆமிக்காரரைப்பற்றி ஒண்டுமே சொல்லேல்லையே எண்டு யாராவது நினைச்சா அது உங்கட முட்டாள்தனம்தான். 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சபாஷ்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...