17 மார்ச் 2013

பாலாவின் பரதேசி!இயக்குனர் பாலா மற்றும் அவருடைய உயிரை உலுக்கும் படங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் கேட்டறிந்திருந்தாலும் தியட்டரில் பார்த்த அவருடைய முதற்படம் “பிதாமகன்”. உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் பார்த்தேன். அதன் பின்னரே தேடிவாங்கி "சேது" மற்றும் "நந்தா" படங்களை பார்த்திருந்தேன். பிதாமகன் படம் பார்த்ததிலிருந்து அதற்குப் பிறகு வெளிவந்த நான்கடவுள், அவன் இவன் மற்றும் தற்போது வெளிவந்திருக்கும் பரதேசிவரை தியட்டரிலேயே பார்த்திருக்கின்றேன். அதுவும் பாலாவின் படங்களை நண்பர்களுடன் சென்று பார்க்காமல் தனியாகவே பார்ப்பது வழக்கம். இந்த படங்கள் எல்லாமே ஒருவகையின் என்னைப்பாதித்ததுண்டு.

பாலா போன்ற கலைப்பட இயக்குனர்கள் உண்மைகளை எடுத்து ஜதார்த்தமாகவும் சிலஇடங்களில் ஜதார்த்தத்தைதாண்டி சில காட்சிகளை அமைத்து அதனுடைய தாக்கத்தினை பார்வையாளர்களுக்கு வழங்கிவிடுவார்கள். இவர்களுடைய படம் முடிவடையும்போது பார்வையாளர்களுடைய மனதை கலங்கடித்துவிடும். அந்தவகையில் நேற்றுப் பார்த்த பரதேசி படம் என்னை மிகவும் Disturb பண்ணிவிட்டது. 
தேயிலைத்தோட்டத்து வாழ்க்கையின் ஆரம்பத்தை அல்லது அவர்கள் வெள்ளையர்களின் தேயிலைதோட்டங்களில் வேலை செய்வதற்கு தங்களது சொந்த ஊரிலிருந்த எவ்வாறு ஏமாற்றி அழைத்து வரப்பட்டார்கள் அங்கே எவ்வாறு வேலைவாங்கப்பட்டார்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை தனக்கே உரிய வன்முறைப்பாணியில் இந்தப்படத்தில் சொல்லியிருக்கின்றார் இயக்குனர் பாலா. 

இந்தப் படத்தில் நடித்த அதர்வா, வேதிகா, தன்ஷிகா உட்பட பெரும்பாலும் படத்திலே இருந்த எல்லோரும் தங்களது பாத்திரங்களை வெகுசிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். "நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு" இது இயக்குனர் பாலாவின் எல்லாப்படங்களிலுமே இருக்கின்ற ஒரு சிறப்பு.
பின்ணணி இசைதான் படத்தினுடைய மிகப்பெரிய பிரச்சனையே. பின்ணணி இசை இல்லாமலேயே இந்த படத்தினை வெளியிட்டிருக்கலாம் என்று படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது தோன்றியது எனக்கு.
சில இடங்களில் பின்ணணி இசை காட்சியுடன் ஒட்டாமலேயே வேறு ஒரு திசையில் பயணிக்கிறது. ஜீவி இப்படியான படங்களுக்கு பின்ணணி இசைவழங்குவதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என தோன்றுகிறது. அத்தோடு வெள்ளையர்களால் கொடுமைப்பட்டதை இன்னும் கூடுதலாக காட்டியிருக்கலாம்.  மொத்தத்தில் எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய உயிரினை உலுக்கும் இயக்குனர் பாலாவின் படம் பரதேசி.அண்மையில் இயக்குனர் பாலா நடிகர்களை தாக்குவதுபோலவும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுபோலவும் வீடியோக்கள் வெளிவந்து சர்ச்சையினை தோற்றுவித்திருக்கினறது. நானும் அந்த வீடியோவை பார்த்தேன் ஆனால் வீடியோவில் காட்டப்பட்டவை காட்சியில் வந்திருப்பவையே ஆகவே ஒரு காட்சியை எப்படி நடிக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு காட்டும்போது எடுக்கப்பட்டவீடியோக்கள்தான் அவை. மேலும் திரைப்படங்களில் பயன்படுத்தம் அந்த தடிக்களால் அடிக்கும்போது வலி ஏற்படாது சத்தம் மட்டுமேவரும் சோ அதைப்பற்றி பெரிதாக வெளியில் இருப்பவர்கள் அலட்டிக்கொள்ளவோ அல்லது அதை தூக்கிப்பிடித்துக்கொண்டு மனிதஉரிமை மீறல் என்று கூக்குரலிடவோ தேவையில்லை என்பதே இந்தத்துறைக்குள் உதவி இயக்குனராக இருக்கும் என்னுடைய கருத்து.


என்னைப் பொறுத்தளவில் பாலா போன்ற இயக்குனர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள். தாங்கள் நினைப்பதுபோல நடிகர்கள் நடிக்கவில்லையென்றால் பேச்சு ஏச்சுக்கள் வாங்கவேண்டி வரும் சிலவேளைகளில் அடியும் வாங்கவேண்டிவரும். ஏன் சிலவேளைகள் உதவி இயக்குனர்கள்தான் கெட்டவார்த்தை திட்டுக்களையும் அடிகளையும் வாங்கவேண்டிவரும். இதை நான் இங்கு ஏன் சொல்கின்றேன்என்றால் எல்லாம் என்னுடைய அனுபவம்தான். இலங்கையின் சிங்கள இயக்குனர் அசோக ஹந்தகமகூட நடிகர்கள் சரியாக நடிக்கவில்லையென்றால் நடிகர்களுடன் கடுமையாக நடந்துகொள்வார். சிலவேளைகளில் எங்களுடனும் கடுமையாகத்தான் நடந்துகொள்வார். இவ்வாறான இயக்குனர்கள் அவர்களுக்கு தேவையான நடிப்பை எவ்வாறாயினும் நடிகர்களை கஷ்டப்படுத்தியாவது பெறவே முயற்சிப்பார்கள் என்பதே உண்மை. ஆகவே அதைப்பற்றி வெளியிலுள்ளவர்கள் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

1 கருத்து:

இக்பால் செல்வன் சொன்னது…

இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...