26 ஏப்ரல் 2016

பாதுகாப்பான ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டாதீர்!


அண்மையில் கனடாவில் இடம்பெற்ற ஈ-குருவி நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக இலங்கையின் ஊடகவியலாளரான திரு நிலாந்தன் அவர்கள் பங்குபற்றி நீண்ட உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார். இந்த உரையானது இந்தியத் தமிழர்கள் மத்தியில் எவ்வளது தாக்கத்தை செலுத்தியதோ தெரியாது ஆனால் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஓரளவு தாக்கத்தினை செலுத்தியது எனக் கூறலாம்.

அவர் தன்னுடைய உரையின் பிரதானமான விடயமாக ஈழத் தமிழர்கள் (இந்த “ஈழத் தமிழர்” எனும் சொற்பதம் இன்னமும் இலங்கையில் நீண்ட கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய விடயம்) தமிழகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இந்த மூன்று பிரிவினரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக சிந்திக்கவேண்டும் அதனடிப்படையிலேயே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அப்படி செயற்படாவிட்டால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது, அதற்கு இந்த மூன்று தரப்பினரும் எவ்வகையான ரீதியில் செயற்படவேண்டும் என்றவாறாக தன்னுடைய உரையினை நிகழ்த்தியிருந்தார்.

திரு நிலாந்தன் அவர்கள் குறிப்பிட்டபடி இந்த மூன்று பிரிவினரும் ஒன்றுபட்டு சிந்தித்து செயலாற்ற முடியுமா என்பது மிகப்பிரதானமான கேள்வி. குறைந்த பட்சம் இலங்கையில் இருக்கும் தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால் இந்தியத் தமிழர்களை இந்த இலங்கை மற்றும் புலம்பெயர் ஆகிய இரண்டு தரப்பினருடனும் ஒன்றிணைக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் இந்தியத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து செயலாற்றும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. தற்போதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த இரண்டு தரப்பினரும் செயற்பட்டு வருகின்றார்கள்.

ஆகவே இலங்கை இந்திய புலம்பெயர் ஆகிய மூன்று தமிழ்த் தரப்பினரும் இலங்கையில் தமிழ்த் தேசியத்தினை கட்டியெழுப்ப ஒரே ரீதியில் செயற்பட முடியுமா என்பது சந்தேகமே! காரணம் இந்தியத் தமிழர்கள் செல்லும் பாதையோ முற்றிலும் வேறுபட்டது. அப்படி ஒருவேளை இந்தியத் தமிழர்கள் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களுடன் செயற்பட ஆரம்பிக்கின்றார்கள் என்று வைத்துக்கொண்டால் சீனாவின் மேலாதிக்கத்தை வென்று ஆசியாவின் சண்டியனாக இல்லையில்லை வல்லரசாக முயற்சிக்கும் இந்தியா அதை எப்படி கையாளும் என்று சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

ஆகவே சாத்தியமில்லாத முன்று தரப்புக்களின் ஒன்றிணைவை கையில் வைத்துக்கொண்டு இந்த மூன்று தரப்பினரும் ஒன்றுபட்டால்தான் இலங்கையில் தமிழ்த் தேசியத்தினை கட்டியெழுப்ப முடியும் என்ற ஒரு மாயையினை தொடர்ந்தும் மக்கள் மத்தியில் தக்க வைத்திருக்க முயற்சிப்பதும் அபாயமானது. இலங்கையில் தமிழர்கள் தாங்களும் இலங்கையர், ஒரு தேசிய இனம் என்று கருதி செயற்படத் தொடங்கினாலேயே மாற்றங்களை காணமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால் இந்தக் கூட்டிணைவு என்ற மாயை எப்போதும் அவர்களை அவ்வாறு சிந்தித்து செயற்படவிடாதோ என்ற அச்சம் இயல்பாகவே எழுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகின்றது.

திரு நிலாந்தன் அவர்கள் இந்த உரையாடலில் சில விடயங்களை மிகவும் நுணுக்கமான கோரிக்கையாக புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி முன்வைத்திருந்தார்.

அதில் பிரதானமான இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். முதலாவது “மிகவும் உச்சபட்ச ஜனநாயக முறைமையுள்ள நாடுகளில் மிகுந்த பாதுகாப்பாக நீங்கள் இருந்து கொண்டு, எம்மை அதாவது இலங்கையில் இருப்பவர்களை ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்காதீர்கள்" அது உங்களுடன் இணைந்து எம்மை செயலாற்றவைப்பதற்கு தடையான ஒரு காரணியாக அமைந்துவிடும்.

இரண்டாவது புலம்பெயர்ந்து வாழும் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தமிழர்கள் இலங்கை வந்து பணியாற்றவும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை.

உண்மையிலேயே திரு நிலாந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளில் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கு உள்ளும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்து நிற்கின்றன. இந்த இரண்டு கோரிக்கைகளையும் புலம்பெயர் தமிழர்களும் இலங்கையிலுள்ள தமிழர்களும் உள்ளாந்தமாக சரிவரப் புரிந்து கொண்டு செயற்படுவார்களெனில் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் எதிர்காலத்தில் நன்மை கிட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.

ஒரு நாட்டின் அரசில் எப்போதுமே வரையறையின்றி செல்வாக்குச் செலுத்துபவர்கள் அந்தந்த நாடுகளின் சிறுபான்மை மக்களான வியாபார பணக்காரர்களே என்ற உண்மை இலங்கையிலிருக்கும் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கும் சரிவரை மண்டைக்குள் உறைக்காதவரை இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் எப்போதுமே தாம் தாழ்வுச் சிக்கல் நிலைக்குள் இருந்துகொண்டு  உலகத்தின் முன்னோக்கிய பயணத்தில் பின்னோக்கியே போய்க்கொண்டிருப்பார் என்பது நிஜம்.

20 ஏப்ரல் 2016

தெறி - வயது வந்தவர்களுக்கு மட்டுமான திரைப்படம்!

கடந்த புத்தாண்டில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தெறி திரைப்படத்தினை நேற்றுத்தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
சினிமா விமர்சகர்கள், விமர்சகரல்லாதோர், பேஸ்புக் ருவிட்டர் என்று எழுதித்தள்ளும் அனைவரும் விமர்சனங்களை பல கோணங்களில் எழுதி முடித்தும்விட்டார்கள்.
ஆனாலும் இந்தப்படத்தை பார்க்கும்போது என்னை உறுத்தில சில விடயங்களை எழுதவேண்டும் எனத் தோன்றியது.

இந்தப்படத்தின் கதைக்குள் மூன்றே விடயங்கள் காணப்படுகின்றது. முதலாவது பழிவாங்கும் கொடூரமான வன்முறை, இரண்டாவது செண்டிமண்ட், மூன்றாவது மீனாவின் பொண்ணு.

உண்மையிலேயே வன்முறைகள் அதிகமாக காணப்படும் படமொன்றை பார்ப்பதற்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.

இந்தப்படத்தில் வன்முறையையும் வைத்துவிட்டு சிறுவர்களை தியட்டருக்கு வரவைப்பதற்காக மீனாவின் மகளை நடிக்க வைத்திருக்கின்றார்கள். அந்தப் பிள்ளை பேசுறது முக்கால்வாசி விளங்குதுமில்லை. இவ்வாறான வன்முறையான திரைப்படங்களை பார்வையிடும்போது சிறுவர்கள் இயல்பாகவே வன்முறையை இரசிக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். ஆகவே குறைந்த பட்சம் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே இவ்வகையான வன்முறைகள் நிரம்பிய படங்களை திரையிடுவதற்கான தணிக்கையினை வழங்கவேண்டும்.

ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவர்களின் சமூகத்தின் உளவியலைப் புhஜந'துகொண்டு தணிக்கை வழங்குவதற்கான தணிக்கையாளர்கள் இல்லையென்பதே உண்மை.

அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படமும் இதே வகையறாதான்.

தெறிபடத்தில் இவற்றை விட ஏற்கனவே பலர் விமர்சனங்களில் குறிப்பிட்டதுபோல காட்சிகள் வசனங்கள் என்பவை இதற்கு முதல் வெளிவந்த பல படங்களை நினைவுபடுத்தி நிற்கின்றன.

அவ்வளவுதான்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...