11 செப்டம்பர் 2008

வானொலியும் நானும்

எனக்கு வானொலி மீது எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.எனது நான்காவது வயதிலேயே(1990ம் ஆண்டளவில்) முதன்முதலில் வானொலிப் பெட்டி ஒன்றை எனது தந்தையர் வீட்டிற்கு வாங்கி வந்தார். முதன் முதலில் வானொலியை பார்த்ததும் எனக்கு அதன் மேல் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதென்று கூறலாம்.
அந்த காலப்பகுதியில் இன்று போல் பல வானொலிகள் இருந்திருக்கவில்லை முதலில் அப்பா கொண்டு வரும் சினிமா பாடல்களை கேட்பேன் பின்பு நான் நினைக்கின்றேன் 1991ன் ஆரம்பத்தில் என்று அப்போது யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலி இரவு 8 மணி தொடக்கம் 9 மணிவரை ஒலிபரப்பை நடத்தி வந்தது என்று. நான் அடம் பிடித்து நித்திரை கொள்ளாமல் 8 மணிவரை இருந்து புலிகளின் குரல் வானொலியை கேட்பேன் அப்போது எனக்கு வானொலியை எப்படி இயக்குவது என்று கூடத் தெரியாது அம்மா தான் வானொலியை இயக்கி அலைவரிசையையும் பிடித்து விடுகின்றது வழக்கம்.இப்படியாக எனக்குள் இந்த வானொலி துறை மீது ஆர்வம் மெதுவாக புகுந்து கொண்டது.அப்போதே எப்படி வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரபுகின்றார்கள் என்று தெரிந்து கொள்ள நிறைய ஆர்வம் அப்போது நான் சிறியவன் ஆகையால் என்னால் அதை தெரிந்துகொள்ள முடியவில்லை. இப்படியாக ஒவ்வொரு நாளும் 8 மணி தொடக்கம் 8.30 மணி செய்தி அறிக்கை முடியும் வரை இருந்து வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கேட்டுவிட்டுத்தான் படுப்பது வழக்கம்.இவ்வாறு இருக்கையில் 1991 நடுப்பகுதியில் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக வானொலிக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்தது.அப்போது வானொலியை இயக்குவதற்க்கு தேவையான பற்றரிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்தவிலை காரணமாக என்னால் வானொலியை கேட்க முடியாது போய்விட்டது.
பின்பு 1995 ம் ஆண்டு மீண்டும் வானொலியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்போது நாங்கள் இடம் பெயர்ந்து பருத்தித்துறையில் இருந்தோம் பாடசாலை விடுமுறைக்காக யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள எனது பெரிய தாயாரின் வீட்டிற்கு சென்றேன் அங்கு ஒரு வானொலி இருந்தது அதிலே MW அலைவரிசையில் இந்தியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தூத்துக்குடி வானொலியின் ஒலிபரப்பை இரவில் 8.45 மணி முதல் 9.15 மணிவரை கேட்ப்பேன் அதுவும் சிறிது நாட்கள் மட்டுமே நீடித்தது.
பின் 1996 ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த காலம் இலங்கை வானொலியில் அதை நேரடியாக வர்ணனை செய்து கொண்டிருந்தார்கள் எனக்கு அதை எப்படியாவது கேட்கவேண்டும் என்ற ஆசை ஆனால் அந்த நேரத்தில் பற்றரிகளுக்கு கடும் தட்டுப்பாடு அந்த நேரத்தில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் குடும்ப அட்டைக்கு இரண்டு பற்றரிகள் வழங்கப்பட்டது ஒருவாறு அடம் பிடித்து எங்கள் ஏனைய உறவினர்கள் இருவருடைய குடும்ப அட்டைகளையும் வாங்கிச் சென்று ஒரு மாதிரியாக பற்றரிகளை வாங்கி வந்து வானொலியில் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் வர்ணனையை கேட்டது இப்போதும் மறக்கமுடியாத சம்பவமாகத்தான் இருக்கிறது.நான் நினைக்கின்றேன் அப்போது மிகவும் வேகமாகவும் தமிழ் உச்சரிப்பு பிழையில்லாமலும் வர்ணனை செய்த ஒரு அறிவிப்பாளர் இருந்தார். எனக்கு சரியாக இன்று அவர் நினைவிற்கு வரவில்லை.அதன் பின்பு மீண்டும் இடப்பெயர்வு. இந்தமுறை வானொலியையும் விட்டுவிட்டுத்தான் ஓடவேண்டிய நிர்ப்பந்தம்.நான் 1996 ம் ஆண்டுக்கு பின்னர் 2001 ம் ஆண்டிலேயே வானொலியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அதுவும் வெளிநாட்டிலிருந்து அப்பா வரும் போது அடம் பிடித்து ஒரு வானொலியை வாங்கி கொண்டுவரச் செய்தேன்.அதன் பிறகு தொடர்ச்சியாக வானொலியை கேட்க ஆரம்பித்தேன் பாடசாலை விட்டு வந்ததும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையை கேட்பேன் அம்மா வந்து பிரத்தியேக வகுப்புக்குச் செல் என திட்டும் வரையும் கேட்பேன் அப்போதும் அதிகம் இந்திய வானொலிகள் தான் கேட்பது வழக்கம்.ஏனென்றால் இந்தியாவின் பல வானொலி சேவைகள் (ஆல் இந்தியா வானொலி, கொடைக்கானல் வானொலி)போன்றவை எமக்கு தெளிவாக கேட்கும் என்பதாலேயே, அத்துடன் இலங்கையின் தனியார் வானொலிகள் யாழ்ப்பாணத்திற்கு தனது சேவைகளை வழங்கி இருந்திருக்கவில்லை.ஆனாலும் சில காலங்களில்(பனிக் காலங்களில்) சக்தி எவ்.எம் வானொலியை மிகத் தெளிவாக யாழ்ப்பாணத்தில் கேட்க கூடியதாக இருந்தது.அப்போது அவற்றின் நிகழ்ச்சிகள் சிலவற்றை நான் விரும்பி கேட்டிருக்கின்றேன்.2002ம் ஆண்டளவில் சக்தி எவ் எம்மும் பின்னர் சூரியன் எவ் எம்மும் தனது ஒலிபரப்பை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார்கள்.அதன் பின்னர் இவற்ருடன் எனது வானொலி நேரங்களை செலவு செய்தேன்.2002 ல் க.பொ.த. சாதாரண தரம் படித்துக்கொண்டு இருந்தபோது நானும் ஒரு அறிவிப்பாளனாக வர வேண்டும் வானொலியை பற்றிய மேலதிக தகவல்களை அறிய வேண்டும் என்ற ஆர்வமும் என்னுள் துளிர் விட்டது.யாழ்ப்பாணத்தில் இருந்தால் அறிவிப்பாளன் ஆகுவது வெறும் கனவாக்கிவிடும் என்று நினைத்து கொழும்பு வந்தேன் ஆரம்பத்தில் நான் நினைத்தேன் வெகு இலகுவாக இத்துறைக்குள் நுழைந்து விடலாம் என்று பின்பு தான் தெரிந்தது அது எவ்வளவு முட்டாதள்தனமான எண்ணம் என்று. 2008ன் பிறகு இதுவரை இரண்டு வானொலிகளின் நேர்முக் தேர்வுக்குச் சென்று கற்றுக்கொள்ள வேண்டிய சிலவற்றை கற்றுக்கொண்டு விட்டேன்.வானொலித்துறை/ஒலிபரப்புத்துறை என்பது ஏனைய துறைகளை விட மிகவும் வித்தியாசமானது,எம்மையே அர்ப்ணித்து வேலை செய்ய வேண்டும்,ஒலிபரப்புத்துறைக்குள் நுழைவது என்பது எல்லோருக்கும் அவ்வளவு சுலபமானது இல்லை,கடினமான பல சவால்களையும்,போட்டிகளையும் எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதையும் நன்றாக புரிந்து கொண்டேன்.ஆனாலும் வானொலி அறிவிப்பாளன் பணி மீது எனக்கு உள்ள ஆர்வம் காரணமாக இந்தச் சவால்களை எதிர் கொண்டு நிர்ச்சயமாக ஒரு வானொலி அறிவிப்பாளனாக வந்துவிடுவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னுள் உறுதியாக இருக்கின்றது.அந்த உறுதியான நம்பிக்கையுடன் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வருணன்
உங்களுடைய பதிவை பார்த்தேன்.மேலே உள்ள பதிவில் நீங்கள் குறிப்பிட்ட அந்த வேகமான அறிவிப்பாளர் நம்பிராஜனாக இருக்க வேண்டும்.இலங்கை கிரிக்கெட் அணியால் ஓரம் கட்டப்பட்ட ஒருவர்.இப்போது பிரன்சில் இருப்பதாக ஒரு தகவல்.
வானொலியில் உமக்கு ஒரு இடம் கிடைக்க உம்முடைய ஆசை நிறைவேற வாழ்த்துகள்.

-----முகுந்தன்----

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்

                    இலங்கை   ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   கடந்த   வாரம்   இரண்டு   நாள்   அரசமுறைப்   பயணமாக ஈரான்   நாட்டுக்கு ...