14 டிசம்பர் 2009

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் சங்கடங்களும்

சரத்பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தில் ஏற்கனவே சூடுபிடித்துள்ள இலங்கையின் அரசியல்களம் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல்
என அறிவித்தபின் மேலும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மத்தியில் அல்லது அவர்கள் சார்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியிலும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான நிலமை இன்னும் தெளிவில்லாமல்தான் இருக்கின்றது. ஏனென்றால் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும்தான் முதல் காரணம். தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு இரு வேட்பாளர்களும் இதுவரையும் தவறிவிட்டனர் என்றனர் என்றே கூறவேண்டும்.

சரத் பொன்சேகா இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்குதான் எங்களுடைய வாக்கை அளித்திருப்போம் என்று கூறுவோரும் இருக்கின்றார்கள். ஆனாலும் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வளவான நல்ல கருத்து இல்லையென்றுதான் கூறவேண்டும். தற்போதைய நிலையில் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்களுடைய வாக்கினை குறிவைத்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனுடைய ஒரு கட்டம்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய யாழ் விஜயம்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியினரும் தங்களுது பிரச்சாரங்களினையும் ஆரம்பித்திருக்கின்றார்கள். யுத்த வெற்றியினையே சிங்கள மக்களிடையே நடக்கும் பிரச்சாரங்களின்போது இரு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
உண்மையிலே தமிழ் மக்களுடைய நிலையோ யாருக்கு வாக்களிப்பது என்று வரும்போது இத்தேர்தலில் சங்கடமான நிலைதான். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இனவாத கருத்தினை கொண்டவர் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. அத்தோடு யாழ் மக்களுக்கு அவரைப்பற்றி ஓரளவுக்கு தெரியும்; ஏனென்றால் யாழின் கட்டளை தளபதியாக இவர் இருந்தவர்.இவரின் காலப்பகுதியில்தான் யாழில் சர்ச்சைக்குரிய விடயங்கள் பல உலக அளவில் பேசப்பட்டன. ஆனாலும் தற்போது தனது இராணுவ சீருடையினை கழைந்து அரசியிலில் நுழைந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதால் தனக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் என்றும் நம்புகின்றார். அத்தோடு தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கு இவர் முகாம் மக்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியின் ஆட்சியில்தான் தமிழர்கள் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது என்ற கருத்தும் காணப்படுகின்றது. ஆனாலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆதரவினை சுதந்திர கட்சிக்கும் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. ஆனாலும் சரத்பொன்சேகாவால தம்முடைய் வாக்குவங்கி உடையலாம் என்று சுதந்திரக்கட்சியின் கருதுகின்றார்கள். இதனாலேயே சரத் பொன்சேகாவிற்கு எதிரான கருத்துக்களையும் சரத் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்தினையும் மக்கள் மத்தியில் பகிரங்கமாக சுதந்திரகட்சியின் பிரச்சார கூட்டங்களில் கூறிவருகின்றனர்.
தமிழ் கூட்டமைப்போ இது தொடர்பாக எந்த முடிவினையும் இதுவரைக்கு தெரிவிக்கவில்லை. சரத்பொன்சேகா இல்லாமல் வேறு ஒருவர் வேட்பாளராக நின்றிருந்தால் கூட்டமைப்பு தன்னுடைய ஆதரவினை ஐதேகவிற்கே வழங்கியிருக்கும் ஆனால் தற்போது அது முடியாத காரியம். மக்களுடைய முடிவு தெரியாமல் யாருக்கும் ஆதரவளக்கவில்லை தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிற்பாடுடு அறிவிக்கின்றோம் எனமட்டுமே தற்போதைக்கு கூட்டமைப்பினரால் கூறமுடியும்.

தற்போது போட்டியிடும் பிரதான இருதரப்பினர்களிடம் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் காணப்படுகின்றது. அதேபோல சர்வதேச சமூகத்துக்கும்கூட இருக்கத்தான் செய்கின்றது. இந்த தேர்தலில் இந்தியாவும் மறைமுகமாக தற்போதைய ஜனாதிபதியே அடுத்த ஜனாதிபதியாகவும் வரவிரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் யாருக்கு என்பதை இன்னமும் சரியாக கணிப்பதற்கு சற்று சிக்கல் நிலையே காணப்படுகின்றது. யுத்தம் இலங்கையில் முடிவுற்ற நிலையிலே தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இரண்டாவது பதிவர் சந்திப்பு எனது பார்வை

கொழும்பு தமிழ் சங்கத்தில்இடம்பெற்ற 1வது பதிவர் சந்திப்புக்கு செல்லாததனால் எனக்கு இதுதான் முதலாவது பதிவர் சந்திப்பாக அமைந்தது. உண்மையிலே இந்த சந்திப்பானது மிகவும் ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பாகவே அமைந்ததென்று கூறலாம் எனென்றால் அங்கு கதைக்கப்பட்ட விடயங்கள்.
முதலில் கலந்துரையாடப்பட்ட பதிவு எழுதுதல் என்பது பற்றிய கலந்துரையாடல்கூட பதிவுகள் எப்படியிருக்கவேண்டும் தனித்துவங்கள் விருப்பங்கள்போன்றவற்றினை ஆழமாக அலசியிருந்தது. தூங்கியவர்களை எழுப்புவதுபோல அப்பப்போ புல்லட் அடித்த லூட்டிகளுக்கும் அளவில்லை. அதற்கு பிறகு பதிவர் லோஷன் தனது கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதேபோலத்தான் பெண்களும் வலையுலகமும் அனானிகள் போன்ற தலைப்புக்களை விவாதிக்கவும் பல தகவல்களை அவற்றின்மூலம் பெறவும் கூடியதாக இருந்தது.
அதேபோல மது தனது பாணியில் கூகிளில் ஆரம்பித்திருக்கும் இலங்கை தமிழ் பதிவர்கள் என்கின்ற குழுமத்தினை எவ்வாறு உபயோகப்படுத்துவது போன்ற பல தொழில்நுட்ப விடயங்களை கூறியது மிகவும் பயனுள்ளதாவே அமைந்திருந்தது. அதேபோல் மாதத்திற்கு ஒருமுறை குழுமத்திலே குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுகூடி கதைப்பது என்ற கருத்து மிகவும் வரவேற்கப்படக்கூடிய ஒன்று.
இறுதியாக ஏற்பாட்டுகுழுவினர் ஏற்பாடு செய்திருந்த இருவிளையாட்டுகளில் நாம் பங்குபற்றினோம் ஓன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை.
ஆகமொத்தத்தில் இரண்டாவது பதிவர் சந்திப்பானது மிகவும் ஒரு காத்திரமான சந்திப்பாகவும் அதேவேளையில் வெற்றிகரமான சந்திப்பாகவே நிறைவு பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு பல பதிவர்களுடன் அளவளவான ஒரு அருமையான சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்ததென்றுதான் நான்கூறவேண்டும்.
அடுத்த சந்திப்பு எப்போது?

11 டிசம்பர் 2009

இங்கையும் வேட்டைக்காரனா (என்ன கொடுமை இது....)

இது எனக்கு வந்த பேஸ்புக் மெசேஜ்


வேட்டைக்காரன் படத்தை ஓட்டுவதற்கு பயபுள்ளைங்க ரொம்ப றிஸ்க் எடுக்கீனம்போல
படத்தை சொடுக்கி பெருசாக பார்க்கலாம்

05 நவம்பர் 2009

கண்ணகிபுரம் எங்கே இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா..."

யா ரிவி
நிறுவனம் தயாரித்து ஆகஸ்ட் 5ம் திகதிமுதல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சகல தமிழ் மற்றும் சிங்கள அலைவரிசைகளிலும் புதன் மற்று வெள்ளி ஆகிய தினங்களில் மாலை 6.45 மணிக்கு ஒலிபரப்பப்படும் வானொலி நாடகம்தான் “கண்ணகிபுரம்”.


19 முதல் 29 வரையான கிரமங்களில் உள்ள இளையோர்களையும் நகர்புறங்களை அடுத்துள்ள இளையோர்களை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் இந்த நாடகம் கற்பனையில் உருவாக்கப்பட்ட கண்ணகிபுரம் என்ற கிராமத்தை மையமாக வைத்தே தயாரிக்கப்படுகின்றது. கண்ணகிபுரம் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரசியமான முறையில் 15 நிமிடங்களை கொண்ட வானொலி நாடகமாக தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றது.

இந்த நாடகத்தொடரை குறிக்கும் விதமாக கண்ணகிபுரம் என்ற இருமொழிப்பாடலொன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றது. அத்தடன் ஒவ்வொரு நாடகத்தின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலினை குறுஞ்செய்தியூடாக அனுப்பும் 5 அதிஷ்டசாலிகளுக்கு யா ரிவி நிறுவனம் பெறுமதியான பரிசுகளையும் வழங்கி வருகின்றது.
பாடலினை கேட்க

ஒலிபரப்பாகும் அலைவரிசைகள் : - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய, வர்த்தக சேவைகளிலும் பிராந்திய ஒலிபரப்புச் சேவைகளான சிற்றி எப்.எம்., ரஜரட்ட எப்.எம்., கந்துரட்ட எப்.எம்., வயம்பஹன்ட, கொத்மலை எப்.எம்.,
தென்றல் எப்.எம்., பிறை எப்.எம்., மற்றும் யாழ். எப்.எம்

தென்றலில் மாலை 5.45 மணிக்கு இந்நாடகம் ஒலிபரப்பாகும்

மேலதிக மற்றும் பரிசு விபரங்களுக்கு -
இங்கே அழுத்துங்கள்

தயாரிப்பு - Video


தீமிதிப்பு - உடப்பு


கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீற்றர் தூரத்தில் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை கிராமம்தான் உடப்பு. அடிப்படையில் தமிழ் கிராமமான இதில் ஏறத்தாள 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 25000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றார்கள்.

இவர்களுடைய மூதாதையர்கள் இந்தியாவில் ஆட்சிசெய்த மொலாய சக்கரவர்த்தியின் கொடூர ஆட்சிக்கு பயந்து இராமேஸ்வரத்திலிருந்து தாதன் என்பவனுடைய தலைமையில் இலங்கையின் மன்னாருக்கு வந்து அங்கிருந்து புத்தளம் ஊடாக உடப்பில் குடியேறியவர்கள் என்று கூறப்படுகின்றது.

கடற்தொழிலே இவர்களுடைய ஜீவனோபாய தொழிலாக அன்றுதொட்டு இன்றுவரை இருந்து
வருகின்றது. விவசாயத்தை சிறியளவாக செய்தாலும் புகையிலை பயிரிடுவதையும் இவர்கள் தங்களுடைய சிறு தொழிலாக செய்து வந்தார்கள். காலப்போக்கில் புகையிலைத்தொழில் மருகிப்போய் இப்போது கடற்தொழிலை மட்டுமே மேற்கொண்டு வருகின்றார்கள். இங்கிருப்பவர்களில் கூடுதலானோர் இந்துமதத்தை சேர்ந்தவர்களாகவும் அவர்களுடைய குல தெய்வமாக திரௌபதை அம்மனும் காணப்படுகின்றது.

இவர்களுடைய மூதாதையர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தபோது கொண்டுவந்த திரௌபதி அம்மனுடைய சிலையை கொண்டு இவ்வூரிலே திரௌபதி அம்மன் ஆலையத்தை நிறுவியிருக்கின்றார்கள். திரௌபதி அம்மனுக்காக ஆடிமாதத்தில் இவர்கள் கொண்டாடும் தீமிதிப்பு விழாவானது இவர்கள் கடைப்பிடிக்கும் விழாக்களில் முக்கியமானது. அத்தோடு இத்தீமிதிப்பு விழாவானது இலங்கையிலே அதிக பக்தர்கள் தீமிதிக்கும் விழாவாக காணப்படுகின்றது.

இவ்விழா அடிப்படையில் மஹாபாரத கதையினை கொண்டதாக காணப்படுகின்றது. திரௌபதாதேவி 5 கணவன்களை மணம் முடிக்கும்போது அவளுக்கு அங்கு ஒரு கெட்டபெயர் ஒன்று உருவாகும். இந்த கெட்டபெயர் வராதபடிக்கு தருமன் ஒரு வருடத்தோடு நாரத மஹாமுனிவர் கூறியபடி ஒருத்தனோடு ஒருத்தி வாழ்ந்து கற்புள்ளவள் என்று உலகத்திற்கு காட்டி அந்த கற்பை நிரூபித்து அடுத்தவனோடு வாழவேண்டும். இதன் நிமித்தமாகத்தான் அடுத்தவனோடு வாழவேண்டும் என்பதற்காக தீயில் இறங்கி தான் கற்புள்ளவள் என்றுகாட்டி அதை நிரூபித்து காட்டுவதுதான் இந்த தீமிதிப்பு என்று கூறப்படுகின்றது.

உடப்பில் தற்போது வாழுபவர்களின் மூதாதையர் இத்தீமிதிப்பு திருவிழாவினை ஒரு விதமான முரட்டு பக்தியியுடனேயே கொண்டாடியதாகவும் தற்போது அந்த முரட்டுப்பக்தி சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். இத்தீமிதிப்பில் 5 வயது சிறுவர்கள் முதல் வயதானவர்களை பங்குளொள்ளுவது விசேடம்.

இத்திருவிழா நடக்கும் ஏககாலத்தில்தான் கதிர்காம திருவிழா நடைபெறுவதால் இவ்விழாவிழா இலகுவாக மக்களிடத்தில் இருந்து மறைந்து போகின்றது. நீங்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் மறக்காமல் சென்று இவ்விழாவினை பாருங்கள்.

படங்கள் : www.udappu.blogspot.com

12 மார்ச் 2009

பேய்க்கதைகள் (நாங்களும் சொல்லுவோமல்லே) -1

எல்லாருடைய மாடும் ஓடுதெண்டு கந்தையருடைய பேத்த கண்டும் ஓடிச்சுதாம்" இது எங்கட ஊரில நான் கேள்விப்பட்ட பழமொழி. அதே போலத்தான் தற்போது வலைப்பதிவுகளில் பிரபல்யமான ஆவிகதைகளை பற்றி நானும் எழுதலாமென யோசித்தேன்.
முதலிலேயே சொல்லுறன் எனக்கு இந்த ஆவி பேய் பிசாசு முனி .................[வேற ஏதும் இருந்தால் இடைவெளியில போட்டுக் கொள்ளுங்க]போன்றவற்றில் நம்பிக்கையில்லை. நாங்க சிங்கமெல்லே நள்ளிரவு 12 மணிக்கும் சுடலையை கடந்து செல்லுவோமெல்லோ. வேணுமெண்டால் என்னைப்பார்த்துதான் இவைகளை பயப்பட வேண்டும். இங்கே நான்கூறப்போகும் சம்பவங்கள் எனது நண்பர்களுக்கு நிகழ்ந்தவையாக அவர்கள் எனக்கு கூறிய உண்மைச் சம்பவங்கள்.

எனது நண்பர் ஒருவர் மலையகத்தில் தோட்டப் பாடசாலையொன்றில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். வார இறுதி நாட்களில் கொழும்புக்கு வந்து விடுவார். இப்படித்தான் ஒருநாள் கொழும்பில் நின்றபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இவரோடு பாடசாலையில் கடமையாற்றும் இன்னொரு ஆசிரியருடைய தம்பி திடீரென்று விபத்தொன்றில் இறந்து விட்டதாக அந்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெரிவிக்கப்பட்ட சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இருக்கும். இவரும் அந்த ஆசிரியரின் தம்பியின் மரணவீட்டில் கலந்து கொள்வதற்கென அவசரம் அவசரமாக புறப்பட்டார்.

அந்த ஆசிரியருடைய வீடு மலையகத்தில் உள்ள நகரிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் உள்ளாக மலையில் இருந்தது. நண்பர் நகரத்தை மாலை ஏழு மணியளவில் சென்றடைந்துள்ளார். நகரத்திலிருந்து மரண வீட்டுக்கு செல்வதற்கு ஒரேயொரு பேரூந்து மாத்திரமே இருந்தது. அதுவும் வேறு ஒருபாதையால் செல்லும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறங்கி ஏறத்தாள இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்லவேண்டும். நண்பரும் சரியென பேரூந்தில் ஏறி அமர்ந்து விட்டார். சுமார் 7.30 மணியளவில் குறிப்பிட்ட அந்த இடத்தில் நடத்துனரால் குறிப்பிட்ட வழியை காண்பித்து நண்பரை இறக்pவிட்டார்களாம். சரியான இருட்டு ஒருபுறம் மெதுவாக மழையும் தூறிக்கொண்டிருந்தது. நண்பருக்கும் புது அனுபவம். தட்டுத் தடுமாறி ஒற்றையடிப்பாதையால் நடந்து சென்று கொண்டிருக்கிறார். பாதையங்கும் சனநடமாட்டம் இல்லாமல் காரிருள் சூழ்ந்து கிடந்தது. நண்பருக்கும் ஒரு சிறு பயம் மனதுக்குள் இருந்தது. வழியிலே பேச்சுக்கு யாரும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். ஒரு அரைக் கிலோமீற்றர் சென்றிருப்பார் பாதையாரத்தில் அரிக்கன் லாம்புடன் உடலெல்லாம் போர்த்திய படி ஒரு மனிதர் நிண்டுகொண்டிருந்தார். நண்பரும் அவரை அணுகி மரணவீட்டுக் சென்று கொண்டிருப்பதாகவும் பாதை சரிவர தெரியவில்லையெனவும் உங்களுக்கு தெரிந்தால் சரியாக கூறும்படி கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த மனிதர் எனக்கு நன்றாக தெரியும் நான்போகும் பாதையில் தான் அந்த மரணவீடு இருக்கிறது என்றும் தன்னுடன் வரும்படியும் கூறியிருக்கிறார். நண்பருக்கும் நல்லதாக போய்விட்டது என்று எண்ணி அவரை பின்தொடர்ந்து சென்றிகொண்டிருக்கிறார்.

ஒரு பதினைந்து நிமிட நடைக்கு பின்னர் பதையிலிருந்து சற்று தூரத்தில் வெளிச்சம் தெரிந்த வீட்டை காட்டிய அந்த மனிதர் அதுதான் குறிப்பிட்ட ஆசிரியரின் வீடு எனவும் அங்கேதான் நீங்கள் செல்லவேண்டும் னெ கூறிசென்றுவிட்டார். நண்பரும் அவருக்கு நன்றிகூறி அந்த
மரணவீட்டை சென்று அடைந்தார். அங்கே இவருடைய சக ஆசிரியரை கண்டு துக்கம் விசாரித்துவிட்டு கதிரையில் அமர்ந்த போது மரண வீட்டுகாக அச்சடிக்கப்பட்ட துண்டுபிரசுரம் ஒன்றை ஒருவர் இவருக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்த நண்பர் அப்படியே உறைந்து விட்டாராம். அந்த துண்டுபிரசுரத்தில் இருந்த மரணமான ஆசிரியரின் தம்பியின் புகைப்படமும் இவரை ஒற்றையடிபாதையினால் கூட்டிவந்த மனிதருடைய படமும் ஒன்றாக இருந்ததே நண்பருடைய அதிர்ச்சிக்கு காரணமாகும். நண்பர் சத்தம் போடாமல் சக ஆசிரியரின் காதில் மெதுவாக இதை சொல்லியிருக்கிறார். அவம் சற்று நேரம் அதிச்சியடைந்து பின்னர் நிதானமடைந்தாராம். இறந்தவனுடன் பதினைந்து நிமிடம் நடந்து வந்ததை நினைக்கும் போது ஒரு திரில் அனுபவமாக இருக்கிறது என கதைக்கும்போது நண்பர் இப்போதும் எமக்கு கூறுவார்.

11 மார்ச் 2009

மலையக பெண்களுக்கு விடிவு கிட்டுமா...


அண்மையில் என்னுடைய அலுவலக பணிp நிமித்தம் ஹட்டன் நகருக்கும் பின்னர் அக்கரபத்தன நகருக்கும் சென்றேன். நாங்கள் புதிதாக தொடங்கவிருக்கும் பெண்களும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் என்ற தொனிப் பொருளை கொண்ட நிகழ்ச்சிக்கு தேவையான தகவல்களை திரட்டுவதே அந்த பயணத்தின் நோக்கம். மலையகத்தை சார்ந்த பெண்களே குடும்ப மற்றும் சமூக வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

அங்கு சென்று கதைக்க போதுதான் எங்களுக்கு இன்னுமோர் விடயமும் தெரிய வந்தது. அதாவது பெண்களின் தோட்ட சம்பளத்தை ஆண்களே பெற்றுக் கொள்ளும் துரதிஸ்டவசமான நிலை. பல பெண்களோடு கதைத்த போது அவர்கள் கூறியது எங்ளுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரியாது. ஆம்பிளைங்கதான் எங்களுடைய சம்பளத்தையும் சேர்த்து எடுப்பார்கள். கேட்ட பொழுது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இதைப்பற்றி சில ஆண்களையும் கேட்ட போது அவர்களும் பெண்களுடைய சம்பளத்தை பரம்பரை பரம்பரையாக ஆண்கள் நாங்கள்தான் எடுத்திட்டு வாறோம். பெண்கள் சம்பளம் எடுக்க போகின்றது இல்லை. இவ்வாறு கிடைத்தது பதில். மலையகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடும் சில சமூக சேவையளர்களும் இதே பதிலை எமக்கு கூறியது மேலும் எமக்கு அதிர்ச்சியாகவிருந்தது. ஏன் பெண்களை அவர்களே உழைத்து பெறும் சம்பளத்தை பெற்றுக்கொள்ள அனுப்பக்கூடாது என திரும்பவும் கேட்டால் ஒரே பதிலைத்தான் அர்களிடமிருந்தும் பெற்றுகொள்ள முடிந்தது.

பெரும்பாலனா ஆண்கள் சம்பளத்தை எடுத்துக் கொண்டு நகர்ப்புற மதுபானசாலைகளை நோக்கித்தான் செல்வார்களாம். வீட்டில் மனைவி சம்பளத்தை பற்றி கேட்டால் பெரிய ரணகளத்தையே உருவாக்கி விடுவார்களாம் நம்முடைய குடிமக்கள். அதைவிட பெரிய சம்பவம் என்னவென்றால் மலையகத்திற்கு விடிவை பெற்றுதருவோம் என மேடைகளில்; வீராவேசப் பேச்சுகளை பேசும் அரசியல்வாதிகளும் கூட தங்களுடைய வெற்றிக்காக மதுபானத்தை வாரியிறைப்பதும் தாரளாமாக கடந்த தேர்தல்களிலும் நடந்திருக்கிறது.

வன்முறைகளை பற்றி பொலிஸில் ஏன் முறைபாடு செயவதில்லையென்றால் குடும்ப கௌரவம் போய்விடும் எனும் பயம்தான் காரணமென பெரும்பாலானவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு பலவாறான பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் மலையகமும் அங்கு வாழும் பெண்களும். இவற்றிலிருந்து விடுபட அவர்கள் தெளிவடைய வேண்டும்.

14 பிப்ரவரி 2009

ஊடகத்துறையில் பத்திரிகைகள் (இலங்கையில்)இன்றைய இயந்திர உலகத்தில் மிகவும் முக்கியமான எல்லோராலும் விரும்பப்படும் துறையாக ஊடகத்துறை விளங்குகிறது. அதிலும் பத்திரிகைத்துறை என்பது கல்வியறிவு உள்ள எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு துறை ஆகும்.அதனாலேயே பத்திரிகைத்துறையை பற்றி நான் இங்கே எழுத தலைப்பட்டுள்ளேன்.

ஆரம்ப காலத்தில் அரசியலின் மற்றும் ஒரு கருவியாக இருந்த பத்திரிகைத்துறை நாளடைவில் மருகி இப்பொழுது பெரும்பாலும் மக்களுக்காகவே நடாத்தப்படும் ஒரு துறையாக காணப்படுகிறது.இந்த பத்திரிகைத்துறை இவ்வளவு வளர்ச்சி பெற்றதற்கு காரணம் மக்களின் படிப்பறிவு/எழுத்தறிவு வளர்ச்சியை கூறலாம்.

தொலைக்காட்சி,வானொலி ,இணையம் போன்ற மக்கள் தொடர்பு ஊடகங்கள் இன்று எவ்வளவோ இருந்தாலும் பத்திரிகைகளுக்கு மக்களிடத்தில் உள்ள முக்கியத்துவம் இன்றும் குறையவில்லை.மாறாக அதிகரித்து உள்ளதென கூறலாம் .இதற்கு காரணம் மக்களின் மனச்சாட்சிகளாக திகழ்பவை இந்தப் பத்திரிகைகள் தான் என்பதை கூறினால் அது மிகையாகாது.அதற்காக ஊடகத்துறையில் உள்ள ஏனையவற்றை குறைத்தும் மதிப்பிட முடியாது என்பதையும் இங்கே சுட்டிககாட்டப்பட வேண்டியுள்ளது.

இன்று பல நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கவும் கூட இந்த பத்திரிகைகளால் தான் முடியும் என்பதும் இந்தப் பத்திரிகைத் துறைக்கான முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.மேலும் இன்றைய நிலையில் பத்திரிகைகளுக்கு சமூக,இன,மொழி நோக்கு ஒரு புறம் இருந்தாலும் கூட மற்றைய தொழில்களை போல இதுவும் ஒரு முக்கிய தொழிலாக மாறிவிட்டது. ஆனாலும் இதற்கு ஒரு சமூகக் கடமை இருக்கின்றது என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.அத்துடன் பத்திரிகைகளின் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மைக்கு பாதகம் இல்லாமல் செய்திகளை வெளியிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

இவ்வளவு பெருமை பெற்ற இந்தத் துறைக்கு எதிராக இன்று செய்தித்தணிக்கை, அலுவலக்கங்கள் மீது தாக்குதல், உண்மையை கூறினால் தடை,சிறை, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்,கொலை, அடக்குமுறை,வாய்ப்பூட்டு, போன்ற இன்னும் பல தண்டனைகளும், கண்டனங்களும், தாக்குதல்களும்,இவைக்கு எதிராக இன்று காத்துக்கொண்டு நிற்கின்றது.இதனாலேயே பத்திரிகையில் வேலை என்றதும் இலங்கையில் பலர் தலை தெறிக்க ஓடுவதும் இலங்கையில் பத்திரிகைத்துறைக்கான எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கி உள்ளது.

பத்திரிகைத்துறையானது துணிச்சல் மிகுந்த,சவாலான,மகிழ்ச்சியான பணித்தான் ஆனாலும் இலங்கையை பொறுத்த வரையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பணியாற்றும் ஒரு துறையாக மாறியிருக்கிறது.

காதல்

உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்…!

உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது…!

உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது…!

உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை…!

உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்…!

உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்…!

உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்…!

இன்று காதலர் தினத்தை கொண்டாடும்
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
http://flashman.blogspot.com/2007/10/blog-post.html

06 பிப்ரவரி 2009

புகைப்படம் சொல்லும் உண்மை

இன்றைய சூழலில் சஞ்சிகைகளின் பங்களிப்பு

இன்றைய காலப்பகுதி இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். வடக்கில் தமிழ் மக்கள் அன்றாடம் மடிந்துகொண்டிருக்க தெற்கிலோ ஊடகங்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு பல வாய்ப்பூட்டுக்கள் போடப்பட்டு ஒரு இக்கட்டாநிலை காணப்படும் இந்த சூழ்நிலையில் ஊடகத்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் சஞ்சிகைகளின் பணியானது மிகமுக்கியமானதாக கருதப்படுகின்றது.

பொதுவாக ஊடகம் எனும்பொழுது அவை மக்களுக்காக செயற்படும் ஒன்றாக அன்றிலிருந்து இன்றுவரை காணப்படுகின்றது. ஊடகத்திலும் குறிப்பாக பத்திரிகைகள் சஞ்சிகைகளை நாம் பார்த்தோம் என்றால் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இவை பிரதான பங்கு வகிக்கின்றது. எழுத்து என்பது ஒவ்வொரு இனத்துக்கும் அவ்வினத்தின் மொழியினுடைய வளர்ச்சிக்கும் முக்கியமானதொன்று. ஒவ்வொரு இனத்தினுடைய வரலாறுகளையும் கலாச்சாரம் பண்பாடுகளையும் அவற்றினுடைய தனித்துவங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லக்கூடிய உன்னதமான பணியினைச் செய்யக்கூடய ஒன்றாக இந்த ஊடகப்பணி காணப்படுகின்றது. இதிலும் சஞ்சிகைகளுக்கு முக்கியமானதொரு இடமுண்டு.

இன்று இலங்கையில் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பல சஞ்சிகைகள் தொடர்ச்சியாகவும், சில தடங்கல்கள் தாமதங்களுடன் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அவை பற்றி எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்கான முதற்காரணமாக இவைகள் மக்களை சென்றடையும் வழிமுறைகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இரண்டாவது பல சஞ்சிகைகள் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்துக்கொண்டு அந்த வட்டங்களுக்குள் உள்ள வாசகர்களை திருப்திபடுத்த முயல்வதே ஆகும்.இவ்வாறான பல காரணங்களுக்காக நாட்டிலுள்ள ஏனைய தமிழ் பேசும் மக்களின் கைகளை அவை சென்றடைவதில்லை.

ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி காலத்தின் கண்ணாடியாக சஞ்சிகைகள் இருக்கவேண்டும் .அந்தந்தக் காலங்களில் நடப்பவற்றை எதிர்காலத்தில் உள்ளவர்களும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இந்த சஞ்சிகைகள் வழங்க வேண்டும் என்பதே என்னுடைய அவா. இற்றைக்கு 2000ம் வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் குறள்பாக்களை ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்காமல் வெறுமனே பாடிவிட்டு போயிருந்தால் இன்று எங்களுக்கு திருக்குறள் என்ற ஒன்று இல்லாமலேயே போயிருக்கும். அதே போலத்தான் மற்றமற்ற வரலாறுகளுக்கும் எமக்கு கிடைத்திருக்காது.

எனவே இன்றைய பதற்றமான சூழ்நிலையில் கொலைகள் அச்சுறுத்தல்கள் சவால்கள் இவையெல்லாவற்றையும் தாண்டி வெறுமனே இந்தியாவில் வெளியிடப்படும் சஞ்சிகைளைப் போலஅல்லாது தமிழ் பேசும் மக்களின் முகவரியாக தனித்துவமாக இவை அமையவேண்டும். அதே போல நாங்களும் அவற்றிற்கு எமது பங்களிப்புக்களை செலுத்தி இவற்றின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க வேண்டும். இந்தியாவிலிருந்த வெளிவரும் சஞ்சிகைகளை பலமடங்கு பணம் செலவு செய்து ஓடர் கொடுத்து வாங்கிப் படிக்கும் எங்களுக்கு சராசரி விலைகளில் கிடைக்கும் உள்ளுர் சஞ்சிகைகளை வாங்குவதற்கு தயக்கமாக இருக்கிறது. முதலில் இந்தியா மோகத்திலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.எங்களுடைய உள்ளுர் படைப்புக்களுக்கு நாம் ஆதரவளிப்போம். உள்ளுர் படைப்புக்களின் வளர்ச்சிக்கு நாங்களே பங்களிப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் அழிவடைந்துவரும் தழிழரின் வரலாறுகள் தமிழ் மொழியின் சிறப்புக்கள எதிர்காலத்தில் நிலைத்திருக்கும்.

28 ஜனவரி 2009

வானொலி நாடக எழுத்தாளர்களுக்கான சந்தர்ப்பம்

யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்கவுள்ள வானொலி நாடக நிகழ்ச்சித்தொடருக்கான நாடக எழுத்தாளர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் திறந்த போட்டிக்கான விண்ணப்பமும் கோரப்படுகிறது.

வானொலி நாடக பிரதி எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். நீங்கள் விரும்பும் தலைப்பில் வானொலி நாடகத்திற்கு பொருத்தமான கதையொன்றினை 1500 – 2000க்கு இடைப்பட்ட சொற்கள் கொண்டதாக சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தெளிவான கையெழுத்தில் எழுதி யங் ஏசிய டெலிவிஷன் நிறுவன முகவரிக்கு அனுப்பவும்.

இந்தப் போட்டியில் தெரிவு செய்யப்படும் 8 பேருக்கு வானொலி நாடக எழுத்தாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நாம் வழங்குவதோடு இந்த பயிற்சிப்பட்டறையில் தெரிவுசெய்யப்படும் 6 பேருக்கு சுமார் 2 வருடங்கள் முழுநேர வானொலி நாடக எழுத்தாளராக யங் ஏசியா டெலிவிஷன் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படும்.

வானொலி நாடக கதையுடன் உங்களது சுயவிபரக் கோவையை 2009 பெப்ரவரி 20ம் திகதிக்கு முன் “வானொலி நாடக பிரதியாக்கல் போட்டி”, யங் ஏசியா டெலிவிஷன், இல 713, டி. பி. விஜேசிங்க மாவத்தை, பெலவத்தை, பத்தரமுல்லை எனும் முகவரிக்கு எழுதியனுப்பவும்.

20 ஜனவரி 2009

அருகிவரும் தமிழரின் அடையாளங்கள்


பேஸ்புக் இணையத்தளத்தில் இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப் எம் வானொலியின் குழுவில் குழும அங்கத்தவர் ஒருவர் கேட்டிருந்த கேள்வி காரணமாகவே இப்படியொரு பதிவெழுதுவதற்கு எனக்கு தோன்றியது. தமிழர்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற பொங்கல் விழா தேவையா என்று அந்த நண்பர் கேள்வியை கேட்டு விமர்சித்திருந்தார். ஏனென்றால் வெற்றி வானொலி தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் போட்டியொன்றை கதிரேசன் ஆலயத்தில் ஒழுங்கு செய்திருந்தது. எனவே இவற்றை பற்றி ஒரு பதிவினை கட்டாயம் இடவேண்டும் என எனக்கு தோன்றியது.

தமிழர்களுடைய கலாச்சாரங்களை பண்பாடுகளை அவர்களுடைய தனித்துவமான அடையாளங்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகவே பொங்கல் போன்ற இவ்வாறான பண்டிகைகள் காண்படுகின்றன. தமிழன் ஆதிகாலந்தொட்டே இவ்வாறான கலாச்சாரங்களை
வெளிப்படுத்தும் விழாக்களை நடத்தி வந்திருக்கின்றான். அத்துடன் எங்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கும் எங்களுடைய தமிழ் கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் கொண்டுசெல்வதற்கு பாதையாக உள்ள ஒரு வழியாகவும் இவை காணப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் தமிழர்கள் பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடியிருந்தார்கள். அதிகாலையிலேயே எழுந்து முற்றத்திலே கோலம் போட்டு மண்பானையில் அவர்களுடைய சுற்றத்தாருடன் மகிழ்ச்சியாக பொங்கினார்கள். அதன் பிற்பாடு தமிழர்களுடைய வீர விளையாட்டுக்களை கிராமத்தாருடன் போட்டியாக விளையாடி தங்களது அன்றைய நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

ஆனால் இன்று சூரிய ஒளிகூட புகமுடியாத மாடிமனைகளுக்குள் முற்றம் என்றால் என்னவென்று தெரியாத பிள்ளைகளுடன் சமையல் எரிவாயு அடுப்புக்களில் நான்கு சுவர்களுக்குமிடையில் பொங்கவேண்டிய சூழலுக்கு உள்ளாகியிருக்கிறோம். அதன்பிறகு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் கண்குளிரப் பார்த்துவிட்டு அன்றைய நாளை அப்படியே கழித்துவிடுகின்றோம். மிகவும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால பணப்பரிசு கொடுத்துத்தான் தற்போது பொங்கலை பொதுஇடத்தில் பொங்கவேண்டியிருக்கிறது. பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் பற்றி பலபேருக்கு தெரியாது. இதனல் இப்போது உள்ள இளைய சந்ததிகள் இவ்வாறான விழாக்களைப்பற்றி சரியாக தெரிந்துகொள்ள முடியாதவர்களாய் அறியதவர்களாக உள்ளனர் என்பது எதிர்காலத்தில் தமிழர்களுடைய கலாச்சாரங்கள் எப்படியிருக்கப் போகின்றது என்பதை அனுமானிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமை ஏற்படுவதற்கு யாரையும் குற்றம் கூறமுடியாது. ஏனென்றால் கலாச்சாரங்கள் அருகி வருவதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். இலங்கையை பொறுத்தவரையில் யுத்தமும் அதன்மூலம் ஏற்படுகின்ற புலம்பெயர்வுகளுமே முதற்காரணமாக காணப்படுகின்றது. அதன்பிறகு ஏனைய கலாச்சாரங்களின் தாக்கம் சினிமா போன்றவற்றையும் குறிப்பிட்டு கூறலாம். ஆனாலும் வருடத்தில் ஒரு நாள் இவ்வாறு வருகின்ற விழாவைக்கூட பண்பாமுகளுடன் முன்னெடுக்க முடியாதவர்களாய் இருக்கின்றோமா என சிந்திக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவேதான் இவ்வாறான விழாக்களை முன்னெடுப்பதற்கும் தமிழ் கலச்சாரங்கள் அழிவடைந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறான விழாக்களை பொதுவான ஓர் இடத்தில் நடாத்தவேண்டிய நிலை காணப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் போனால் எதிர்காலத்தில் "பொங்கலோ அப்படியெண்டால் என்ன?" என்று கேட்கும் நிலை உருவாகும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். தமிழர்கள் தற்போது இருக்கும் நிலையில் ஆடம்பரங்களை தவிர்த்து விழாக்களை சிறப்பாக கொண்டாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே தமிழர்களுடைய பாரம்பரிய விழாக்களை முன்னெடுப்பதற்கு யாரும் பின்னிற்க கூடாது. இவற்றை முன்னெடுத்து அதன்மூலம் எங்களுடைய தனித்துவங்களை எதிர்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ளும் வழிவகைகளை மேற்கொள்ளும் கடப்பாடு எங்களுக்கு உள்ளதென்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடவும் கூடாது.

13 ஜனவரி 2009

இன்றுமுதல் புதிதாய் எனது வலைப்பதிவு - வதீஸின் பிதற்றல்கள்

தற்போது பிரபலமாகவுள்ள வலைப்பதிவைப்பற்றி 2005ம் ஆண்டிலேயே முதன்முதலாக அறிந்து கொண்டேன். ஆனால் அதைப்பற்றி பூரண விளக்கம் அதாவது எப்படி பதிவுகளை இடுவது என்பது பற்றி சிறுஅளவிலேனும் தெரிந்திருக்கவில்லை.ஆனாலும் பிளக்கரில் எனது

பெயரில் ஒரு வலையை ஆரம்பித்தேன். அதன் பின்னர் 2008ம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே இந்த வலைப்பதிவை மீண்டும் ஆரம்பித்து பதிவுகளை இட்டு வருகின்றேன். அதன் ஒரு கட்டமாக பலகாலமாக இருந்த template ஐ மாற்றிவிட்டு புதிதாக ஒரு template ஐ இட்டிருக்கின்றேன். இந்தக் பிதற்றல்களுக்கிடையில் என்னுடைய கணனி அனுபவத்தைபற்றியும் சிறிது சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன்.

நன்றாக நினைவிருக்கின்றது கணனி எனும் வார்த்தையை 90களின் பிற்பகுதியிலேயே நான் கேட்டிருக்கின்றேன். மனிதனுடைய மூளையைவிட மிகவும் திறமையானது என ஆசிரியர்கள் கூறிக் கேட்டிருக்கின்றேன். கணனியை பற்றி பல கற்பனை விவாதங்களைக்கூட நானும் என்னுடைய நண்பர்களும் நடத்தியிருக்கின்றோம். அதன் பிறகு 2000ம் ஆண்டளவில் கணனியை பாடசாலையில்தான் நேரடியாக கண்ணால் பார்த்திருக்கின்றேன். ஆனாலும் கணனியுள் புகுந்து விளையாடவேண்டும் எனும் ஆசை அல்லது ஆர்வம் எனக்குள் இருந்து கொண்டிருந்தது.

நான் யாழ்நகரில் என்னுடைய பெரியப்பாவின் வீடடிலிருந்துதான் கல்வியை கற்றுக்கொண்டிருந்தபடியால் இளவாலையில் இருக்கும் எனது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவைதான் சென்று வருவேன். 2002ம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சையை எழுதிவிட்டு விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது தந்தை மத்திய கிழக்கு நாட்டிலிருந்து விடுமுறையில் வரும்போது ஒரு கணனியை வாங்கி வந்திருந்தார். 2002ம் ஆண்டு மார்கழி மாதம் 20ம் திகதிதான் முதன்முதலாக நான் கணனியை தொட்டுப்பார்த்த நாள். ஆனாலும் அதை எப்படி இயக்குவது என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அப்போது என்னுடைய தம்பிக்கு கணனியில் என்னைவிட சற்று அனுபவம் அதிகம். தம்பியின் வழிகாட்டலில் ஒருமாதிரியாக கணனியை இயக்கி கணனியில் உள்ள சீட்டு(Cards) விளையாட்டைபற்றி அறிந்து கொண்டேன்.(நாசமா போக என்று நீங்கள் கூறுவது விளங்குகிறது) அன்றிலிருந்து கணனி விளையாட்டுக்கள் விளையாடுவதும் படம் பார்ப்பதுமாக கணனியுடன் எனது விடுமுறை கழிந்து கொண்டிருந்தது.

பரீட்சை முடிவுகள் வெளியாகி உயர்தரத்தை தொடர்வதற்காக பெரியப்பாவின் வீட்டுக்கு செல்லவேண்டும். எனக்கோ போகும்பொது கணனியையும் எப்படியாவது கொண்டுபோய்விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் பெரியப்பா தடையாக நின்றார். "கொம்பியூட்டரை இங்க கொண்டுவந்தானென்றால் இவன் இங்க படிக்கமாட்டான் அது அங்கையே இருக்கட்டும்" அப்பாவும் அண்ணனுடைய பேச்சை தட்டாமல நீ போராசா என்று வெறும்கையுடன் அனுப்பி விட்டார்.

அதன் பிற்பாடு எங்களுடை கல்லூரியில் கணனியை ஒரு பாடமாக கற்பித்தார்கள். ஆரம்பத்தில் MS Word அதன்பின்னர் Poweroint அதன்பின்னர் Pascal எனும் கணனி மொழியையும் கற்பித்தார்கள். அன்று கணனியை எனக்கு கற்பித்த கஜன் ஆசிரியரை என்றுமே மறக்க முடியாது. கணனியை பற்றி அனறு நான் வைத்திருந்த எண்ணிலடங்காத சந்தேகங்களை தீர்த்த ஆசான் அவர். தற்போது மாலைதீவில் கணனியை கற்பிப்பதாக அறியமுடிகிறது. அன்றைய காலப்பகுதியில் தான் எனக்கு இணையத்தை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் யாழ் நகரத்தில் அமைந்திருந்த தகவல் தொழிலநுட்ப பூங்காவிலேதான்(IT Park) இணையத்தளத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிட்டியது. யாகூ(Yahoo) தளத்தை முதன்முதலாக பார்த்தது இப்போதும் நன்றாக இருக்கிறது. அதன் பிறகு சிறிது காலத்தில் இணையத்தில் எனக்கென்று இலவச தளமொன்றை(ww.vathees.8m.com) உருவாக்கும் அளவிற்கு சாராசரி அறிவை பெற்றுவிட்டேன். அந்தக் காலப்பகுதியில் தான் வலைப்பதிவு பற்றி எனக்கு தெரிய வந்தது. ஆனாலும் அதைப்பற்றி எனக்கு சரியாகத் தெரியவும் இல்லை. அறிந்திருந்தோரும் அப்போது எனக்குத்தெரிந்தளவில் இல்லை. அதனால் வலைப்பதிவெழுதும் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டேன் ஆனாலும் இணயத்தை பற்றி நிறையவே அறிந்துகொள்ள முற்பட்டேன். எனக்கு தேவையனவரையிலும் அறிந்து கொண்டேன்.

அன்றிலிருந்து இன்றுவரை கணனி சம்மந்தமான பல தகவல்களை பல தேடல்களின் மூலமும் அறிந்தவர்களின் மூலமும் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. கூடுதலாக எனக்கு தொலைக்காட்சி வானொலி போன்ற துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தபடியால் அவற்றுடன் சம்பந்தப்பட்ட மென்பொருட்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதாவது Audio Video Editing மென்பொருட்களை தேடிக் கற்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. தற்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது என்னுடைய வலைப்பதிவைப் பார்க்கும்போது ஒரு பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்து சீரியாக செல்கின்றதுபோல தோன்றுகின்றது. சீரியசை கொஞ்சம் குறைத்தால் மிகவும் நல்லது என கூறும் நண்பர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென

நினைத்திருக்கின்றேன். தொடர்ந்தும் வலைப்பதிவை மெருகேற்றிக் கொண்டு எனக்கு தோன்றுபவை எனக்கு பிடித்தவற்றை தொடர்ந்தும் இந்த வலைப்பதிவின் மூலம் வெளிப்படுத்தவே விரும்புகின்றேன். ஏனென்றால் என் எண்ணங்களை எழுத்துக்களை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் ஒரு பொக்கிஷமாகவே வலையத்தை நான் கருதுகின்றேன். ஒவ்வொரு நாளும் பதிவு இடாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிற்சயமாக பதிவுகளை தமிழில் இடுவேன்.

06 ஜனவரி 2009

இலங்கையில் பிரபல்யமாகி வரும் இரு மொழிப்பாடல்கள்

இன்றைய காலப்பகுதியில் இலங்கையின் இசைத்துறையில் இரு மொழிப் பாடல்கள் மிகவும் பிரசித்தம் பெற்றவையாக விளங்குகிறது.1992 ஜிப்சீஸ் இசைக்குழுவினர் முதன்முதலாக லொவே சமா எனும் இருமொழிப்பாடலை முதன்முதலில் பாடி புதிய வழியை காட்டினர். ஆனாலும் 2001ம் ஆண்டின் பின்னரே இவை போன்ற பாடல்கள் வெளிவந்து பிரபல்யம் அடையத்தொடங்கின.தற்போது இந்தப் பணியில் கிருஷான்,தினேஷ்,கஜன்,இராஜ் போன்றவர்களை முக்கியமாக கூறலாம்.அது பற்றிய ஒரு கதையையே நீங்கள் கீழுழ்ள ஒளிப்பட்த்தில் காணலாம்

அழகுசாதனப் பொருட்களும் பாவப்பட்ட மிருகங்களும்

அழகுசாதனப்பொருட்கள் என்பது மனிதர்களுக்கு இன்றைய காலக்பகுதியில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. மனிதர்களுக்கு என்று கூறுவதைவிட பெண்களுக்கு என்று கூறுவது

சாலச்சிறந்தது. இன்று மேக்கப் இல்லாமல் பெண்கள் வீதியில் நடமாடுவது என்பது சாத்தியம் இல்லாததொன்று எனக்கூறலாம். அதுவும் மனிதர்களுடைய வாழிக்கையுடன் ஒன்றித்துவிட்டதாக மாறியுள்ளது. இந்த அழகு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கூடுதலாக இந்தியாவிலேயே காணப்படுகின்றது. இங்கே அதிகமான நுகர்வு காணப்படுவதே இதற்கான காரணமாகும். ஆனால் இந்த அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் முறையைக்கேட்டால் மிகவும் கொடுமையாக இருக்கிறது. பரிசோதனை எனும் பெயரில் பல உயிர்களைக் கொன்று உருவாக்கப்படும் அழகுசாதனங்களை நாம் பயன்படுத்துகின்றோம் எனும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

புதிதாக ஒரு அழகுசாதனப்பொருளை உற்பத்தி செய்து முதலில் இதை குரங்குகளுக்கு

பரிசோதித்து பார்ப்பதேயாகும். உதாரணத்திற்கு கண் மை அல்லது Eye liner இல் கலக்கப்படும் இரசாயனப் பதார்த்தத்தை முதலில் குரங்குளிலேயே பரிசோதிக்கப்படுகிறது. இவற்றின் கண்களுக்குள் ஊசிளின் மூலமே செலுத்தப்படுகின்றன. குரங்ககள் கண்களை கசக்கிவிடக்கூடாது என்பதற்காக மருந்தை செலுத்தும் முன்பே அவற்றின் கை, கால்கள் கட்டப்படுகின்றன. ஆகவே மருந்தின் வீரியத்தை தாங்கமுடியாமல் அவை வீரிட்டு அழுகின்றன. 12 அல்லது 24 மணிநேரத்தின் பின்னர் மீண்டும் அவற்றை பரிசோதிக்கப்படுகின்றது. அப்போது கண்கள் சீழ் பிடித்து இருக்கும். அல்லது கண்கள் குருடாகியிருக்கும். அந்தளவிற்கு வீரியமான மருந்துகளாக அவை காணப்படுகின்றன.

இந்த முறையானது 1927ம் ஆண்டே முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதை LD 50 Test என்றே அழைக்கப்பட்டது. அதாவது இரசாயனப் பொருட்களின் விஷத்தன்மையை பரிசோதிப்பது என்பதேயாகும். இதன்போது 50 வீதமானவை இறந்துவிட்டன. பின்னர் இரண்டாம் கட்டமாக 1938ம் ஆண்டளவிலே ஆரம்பிக்கப்பட்டது.

இதுபற்றி The American Association for Laboratory Animal Science பின்வருமாறு கூறுகின்றது.
Every year millions of Animals are maimed, Blinded, Scalded, Force-fed Chemical, Genetically mutated and Killed in tha name of Science by private institutions, household products, Cosmetic Companies, government agencies, educational institutions, and Scientific Centers.


மிருகங்களுக்கு பரிசோதிக்கப்பட்டு விற்பனையாகும் பொருட்களுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியதால் தற்போது “மிருகங்களில் பரிசோதிக்கப்படாதது” என லேபிள் பொறித்து பல நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திகளை விற்பனை செய்கின்றன.
மற்றும் ஒரு புறத்தில் மருந்து வகைகளின் தயாரிப்புக்கும் இவ்வாறே பல மிருகங்களை மனிதன் பயன்படுத்தி வருகின்றான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Every year Approximately 17 - 22 Million Animals are used in Research

05 ஜனவரி 2009

எந்திரன் கைமாறியது ஏன்?


அண்மையில் தமிழ் சினிமா உலகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந் நடித்துக்கொண்டிருக்கும் எந்திரன் திபை;படம் கைமாறிய கதை. ஜங்கரன் இன்ரர்னேசினல் நிறுவனம் தயாரித்த அப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அதைப்பற்றி குமுதம் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையைத்தான் கீழே வழங்கியிருக்கிறேன்

எந்திரன்' படத்தைப் பொறுத்தவரை அதன் தயாரிப்பின் பின்னணியில் நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான மினிட்ஸ் என்ன? களத்தில் குதித்தோம்.

பொழுதுபோக்கு உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஈராஸ், ஐங்கரன் நிறுவனத்துடன் கைகோர்த்துப் படத் தயாரிப்பில் இறங்கியது. இதற்குக் காரணம் இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களின் எஃப்.எம்.எஸ்.(ஃபாரின், மலேஷியா, சிங்கப்பூர் என்பதன் சுருக்கம்) எனப்படும் வெளிநாடுகளில் திரையிடும் உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் தற்போதைய ட்ரெண்டான டி.வி.டி.க்கள் செல்ஃபோனில் டவுன் லோட் செய்யும் டிஜிட்டல் உரிமைகளும் ஐங்கரன் வசம் இருப்பதுதான்'' என்கிறார் தமிழ் சினிமாவின் வியாபார செய்திகளை வெளியிடும் `தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட்' டின் ராமானுஜம்.

இதனாலேயே சுமார் இரண்டாயிரம் கோடி வரை ஈராஸ், ஐங்கரன் மூலமாக முதலீடு செய்ததாக கிசுகிசுக்கிறார்கள். இந்நிலையில்தான் `எந்திரன்' படத் தயாரிப்பில் இறங்கின இந்நிறுவனங்கள். உலகம் முழுவதுமே பொருளாதார மந்த நிலையில் தள்ளாட, ஈராஸ் நிறுவனம் ஐங்கரன் இதுவரை தயாரித்த படங்களுக்கான செலவு விவரங்களைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டதாம். இந்தச் சூழ்நிலையில் உருவான சில சிக்கலான விஷயங்களால்தான் ஈராஸ், ஐங்கரனுடனான கூட்டுத் தயாரிப்பிலிருந்து விலக முடிவெடுத்ததாம்.

`எந்திரன்' படத் தயாரிப்பைப் பொறுத்தவரை நூற்றி இருபது கோடி பட்ஜெட் என்று முதலில் சொல்லப்பட்டது. ஷங்கரை பொறுத்தவரையில் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? படம் எப்பொழுது முடிவடையும்? என்ற இரு முக்கியமான கேள்விகளைக் கேட்கக் கூடாதாம் என்ற ரீதியில் தமிழ் சினிமாவில் ஒரு கிசுகிசு வலம் வந்தபடிதான் உள்ளது. ஒரு ஷெட்யூலுக்கு இவ்வளவு பணம் வேண்டுமென்று கேட்டால், அந்த தொகையை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துவிட வேண்டுமாம். பிறகு அதை நிர்வகிப்பது ஷங்கரின் தனி புரொடக்ஷன் டீம்தானாம். ஈராஸ் விலகிய பின்னர் ஐங்கரன் நிறுவனம் இந்த வகையில் இருபத்தியாறு கோடி வரை செலவழித்திருக்கிறதாம்.

இந்நிலையில்தான் `எந்திரனை' நாமே அண்டர்டேக் செய்தால் என்ன? என்ற ரீதியில் ரஜினியும், ஷங்கரும் ஒரு கட்டத்தில் யோசித்ததாகவும் சொல்கிறார்கள். அதேநேரம் அவ்வாறு அண்டர்டேக் செய்தால் தயாரிப்புக்காக பணத்தை முதலீடு செய்வதுடன், படம் முடிந்தபின் வியாபாரம் செய்யும் வரை அந்த டென்ஷனான வேலைகளை நம் தலையில் போட்டுக் கொண்டால் நினைத்த மாதிரி படமெடுக்க முடியாது. அதனால் வேறு தயாரிப்பாளரை அணுகலாம் என இருவரும் முடிவெடுத்தார்களாம்.

இதற்குப் பிறகே சன்பிக்சர்ஸுடன் கைகோர்த்திருக்கிறார்கள். `எந்திரனை' சன்பிக்சர்ஸ் வாங்க முற்பட்டதற்குப் பின்னணியில் சன் டி.வி.க்கும் ஐங்கரனுக்கும் இடையிலான தொழில் போட்டியும் ஒரு காரணமாம். கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டபோது லண்டனிலும், வெளிநாடுகளிலும் அதை ஒளிபரப்பு செய்ய ஐங்கரன் உதவியது. அதனாலேயே தடாலடியாக எந்திரனை கைமாற்ற சன்பிக்சர்ஸ் தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டதாம். இந்த முயற்சி மளமளவென அரங்கேற `எந்திரன்' கைமாறிய விஷயம் அதுபற்றிய செய்தி வெளிவரும் வரை ஐங்கரன் நிறுவனத்திற்கே தெரியாது என்றும் ஒரு ஷாக்கான கிசுகிசு உலாவருகிறது.

எந்திரனை கைமாற்றும் விஷயம் தொடர்பாக பேச ஐங்கரன் கருணாமூர்த்தியை தொடர்பு கொள்ள ரஜினியும், ஷங்கரும் முயன்றிருக்கிறார்களாம். லண்டனில் தனது உறவினர் திருமணத்திற்காக சென்ற கருணா, படத் தயாரிப்பிற்கான பணத்தைக் கேட்கிறார்கள் என போனில் பேசவே இல்லையாம். திருமணம் முடிந்த பிறகு கருணாமூர்த்தி ஷங்கரையும், ரஜினியையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்ய இவர்கள் போனை எடுக்கவே இல்லையாம். இதனால்தான் எந்திரன் கைமாறியது கருணாமூர்த்திக்கு தெரியாமலே போனதாம்.


அதே நேரம் எந்திரன் கைமாறிய விஷயத்தில் சின்ன சிக்கலும் இருப்பதாக முணுமுணுக்கிறார்கள். பொதுவாகவே ஒரு படத்தைத் தயாரிக்கும்போது அப்படத்தின் நெகட்டிவ் உரிமை, லேப் லெட்டர் டைட்டில் உரிமை ஆகியன தயாரிப்பாளரின் பெயரில்தான் இருக்கும். இதை வைத்தே படத்தை வெளியிட முடியும். இவையாவும் ஐங்கரன் நிறுவனத்தின் பெயரில்தான் உள்ளதாம். அதே போல் ஐங்கரனிலிருந்து என்.ஓ.சி. தரப்படவில்லையாம். அதற்கு முதல் தயாரிப்பாளர் இதுவரை செய்த செலவுகளை செட்டில் செய்த பிறகே இந்த என்.ஓ.சி. வழங்கப்படுவது வழக்கம்.

`என்னுடைய சுயநலத்திற்காக நான் எந்த முடிவும் எடுக்கமாட்டேன்' என்று ரஜினியும், ஷங்கரும் இந்த விஷயத்தில் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை என்பதும் ஹைலைட்டான விஷயம். அதே நேரம் சன் பிக்சர்ஸ் சார்பில் இதுவரை ஐங்கரன் செலவு செய்த பணத்தை முழுமையாக செட்டில் செய்ய பேசி வருகிறார்கள். இதற்கு காரணம் `எந்திரன்' சன் பிக்சர்ஸின் நேரடி தயாரிப்பில் வெளிவரும் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற ஐடியாதானாம். ஆனால் ஐங்கரன் நிறுவனமோ தாங்கள் செய்த செலவுடன் சில கோடிகளை சேர்த்து லாபம் கேட்கிறதாம். இதனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டேயிருக்கிறதாம்.

அடுத்தது என்ன? வெயிட் அண்ட் ஸி..

http://www.kumudam.com/magazine/Kumudam/2009-01-07/pg4.php

02 ஜனவரி 2009

ஜனாதிபதியும் ஊடகத்துறையும்


2009 ம் வருடம் ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகி விட்டது.
பத்திரிகைகளில் வான்தாக்குதல்கள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றது. வெற்றியின் பேப்பர் தம்பியும் சலிக்காமல் அவற்றை வாசித்துகொண்டு இருக்கிறார். அதேபோல் இலங்கையின் யுத்த களமுனைகளிலிருந்து வெற்றிச் செய்திகள், சூழுரைப்புக்கள் பலவும் இலங்கை மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மறுமுனையில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனாதிபதியால் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது (இதுதான் இன்று காலை கண்விழித்தவுடன் நான் வானொலிமூலம் தெரிந்து கொண்ட செய்தி) நீண்ட நாட்களாக பலராலும் எதிர்பார்த்த ஒன்றுதான். மேலும் ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி தானே பொறுப்பேற்றுக்கொண்ட செய்தியும் கிடைத்தது. இது பலாராலும் எதிர்பார்க்காத ஒரு முக்கியமான விடயம் தான்.

இலங்கையை ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் காணப்படுகின்ற ஒரு நாடாக மனித உரிமை அமைப்புகளாலும் பல ஊடக அமைப்புக்களாலும் பட்டியலிட்டுவரும் நிலையில் ஜனாதிபதி ஊடக அமைச்சை பொறுப்பேற்றிருப்பதானது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாற்றமானது பலர் மத்தியில் பல எதிர்பார்புக்களை தோற்றுவித்துள்ளது.இனிவரும் காலங்களில் ஜனாதிபதி ஊடகத்துறைக்கு என்ன செய்யப் போகிறார் போன்றவற்றையும் இதனால் ஏற்படப்போகும் அனுகூலங்களை அல்லது பிரதிகூலங்களை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். .

01 ஜனவரி 2009

இனிய புதுவருட வாழ்த்துக்கள்


வலையுலகத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
பிறந்திருக்கும் இந்த புதிய வருடமானது அல்லல்படும் தமிழ் மக்களுக்கு நிதந்தர அமைதியை கொண்டுவரும் ஒரு ஆண்டாக மலர பிரார்த்திப்போமாக

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்

                    இலங்கை   ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   கடந்த   வாரம்   இரண்டு   நாள்   அரசமுறைப்   பயணமாக ஈரான்   நாட்டுக்கு ...