28 ஜனவரி 2009

வானொலி நாடக எழுத்தாளர்களுக்கான சந்தர்ப்பம்

யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்கவுள்ள வானொலி நாடக நிகழ்ச்சித்தொடருக்கான நாடக எழுத்தாளர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் திறந்த போட்டிக்கான விண்ணப்பமும் கோரப்படுகிறது.

வானொலி நாடக பிரதி எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். நீங்கள் விரும்பும் தலைப்பில் வானொலி நாடகத்திற்கு பொருத்தமான கதையொன்றினை 1500 – 2000க்கு இடைப்பட்ட சொற்கள் கொண்டதாக சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தெளிவான கையெழுத்தில் எழுதி யங் ஏசிய டெலிவிஷன் நிறுவன முகவரிக்கு அனுப்பவும்.

இந்தப் போட்டியில் தெரிவு செய்யப்படும் 8 பேருக்கு வானொலி நாடக எழுத்தாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நாம் வழங்குவதோடு இந்த பயிற்சிப்பட்டறையில் தெரிவுசெய்யப்படும் 6 பேருக்கு சுமார் 2 வருடங்கள் முழுநேர வானொலி நாடக எழுத்தாளராக யங் ஏசியா டெலிவிஷன் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படும்.

வானொலி நாடக கதையுடன் உங்களது சுயவிபரக் கோவையை 2009 பெப்ரவரி 20ம் திகதிக்கு முன் “வானொலி நாடக பிரதியாக்கல் போட்டி”, யங் ஏசியா டெலிவிஷன், இல 713, டி. பி. விஜேசிங்க மாவத்தை, பெலவத்தை, பத்தரமுல்லை எனும் முகவரிக்கு எழுதியனுப்பவும்.

20 ஜனவரி 2009

அருகிவரும் தமிழரின் அடையாளங்கள்


பேஸ்புக் இணையத்தளத்தில் இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப் எம் வானொலியின் குழுவில் குழும அங்கத்தவர் ஒருவர் கேட்டிருந்த கேள்வி காரணமாகவே இப்படியொரு பதிவெழுதுவதற்கு எனக்கு தோன்றியது. தமிழர்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற பொங்கல் விழா தேவையா என்று அந்த நண்பர் கேள்வியை கேட்டு விமர்சித்திருந்தார். ஏனென்றால் வெற்றி வானொலி தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் போட்டியொன்றை கதிரேசன் ஆலயத்தில் ஒழுங்கு செய்திருந்தது. எனவே இவற்றை பற்றி ஒரு பதிவினை கட்டாயம் இடவேண்டும் என எனக்கு தோன்றியது.

தமிழர்களுடைய கலாச்சாரங்களை பண்பாடுகளை அவர்களுடைய தனித்துவமான அடையாளங்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகவே பொங்கல் போன்ற இவ்வாறான பண்டிகைகள் காண்படுகின்றன. தமிழன் ஆதிகாலந்தொட்டே இவ்வாறான கலாச்சாரங்களை
வெளிப்படுத்தும் விழாக்களை நடத்தி வந்திருக்கின்றான். அத்துடன் எங்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கும் எங்களுடைய தமிழ் கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் கொண்டுசெல்வதற்கு பாதையாக உள்ள ஒரு வழியாகவும் இவை காணப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் தமிழர்கள் பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடியிருந்தார்கள். அதிகாலையிலேயே எழுந்து முற்றத்திலே கோலம் போட்டு மண்பானையில் அவர்களுடைய சுற்றத்தாருடன் மகிழ்ச்சியாக பொங்கினார்கள். அதன் பிற்பாடு தமிழர்களுடைய வீர விளையாட்டுக்களை கிராமத்தாருடன் போட்டியாக விளையாடி தங்களது அன்றைய நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

ஆனால் இன்று சூரிய ஒளிகூட புகமுடியாத மாடிமனைகளுக்குள் முற்றம் என்றால் என்னவென்று தெரியாத பிள்ளைகளுடன் சமையல் எரிவாயு அடுப்புக்களில் நான்கு சுவர்களுக்குமிடையில் பொங்கவேண்டிய சூழலுக்கு உள்ளாகியிருக்கிறோம். அதன்பிறகு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் கண்குளிரப் பார்த்துவிட்டு அன்றைய நாளை அப்படியே கழித்துவிடுகின்றோம். மிகவும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால பணப்பரிசு கொடுத்துத்தான் தற்போது பொங்கலை பொதுஇடத்தில் பொங்கவேண்டியிருக்கிறது. பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் பற்றி பலபேருக்கு தெரியாது. இதனல் இப்போது உள்ள இளைய சந்ததிகள் இவ்வாறான விழாக்களைப்பற்றி சரியாக தெரிந்துகொள்ள முடியாதவர்களாய் அறியதவர்களாக உள்ளனர் என்பது எதிர்காலத்தில் தமிழர்களுடைய கலாச்சாரங்கள் எப்படியிருக்கப் போகின்றது என்பதை அனுமானிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமை ஏற்படுவதற்கு யாரையும் குற்றம் கூறமுடியாது. ஏனென்றால் கலாச்சாரங்கள் அருகி வருவதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். இலங்கையை பொறுத்தவரையில் யுத்தமும் அதன்மூலம் ஏற்படுகின்ற புலம்பெயர்வுகளுமே முதற்காரணமாக காணப்படுகின்றது. அதன்பிறகு ஏனைய கலாச்சாரங்களின் தாக்கம் சினிமா போன்றவற்றையும் குறிப்பிட்டு கூறலாம். ஆனாலும் வருடத்தில் ஒரு நாள் இவ்வாறு வருகின்ற விழாவைக்கூட பண்பாமுகளுடன் முன்னெடுக்க முடியாதவர்களாய் இருக்கின்றோமா என சிந்திக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவேதான் இவ்வாறான விழாக்களை முன்னெடுப்பதற்கும் தமிழ் கலச்சாரங்கள் அழிவடைந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறான விழாக்களை பொதுவான ஓர் இடத்தில் நடாத்தவேண்டிய நிலை காணப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் போனால் எதிர்காலத்தில் "பொங்கலோ அப்படியெண்டால் என்ன?" என்று கேட்கும் நிலை உருவாகும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். தமிழர்கள் தற்போது இருக்கும் நிலையில் ஆடம்பரங்களை தவிர்த்து விழாக்களை சிறப்பாக கொண்டாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே தமிழர்களுடைய பாரம்பரிய விழாக்களை முன்னெடுப்பதற்கு யாரும் பின்னிற்க கூடாது. இவற்றை முன்னெடுத்து அதன்மூலம் எங்களுடைய தனித்துவங்களை எதிர்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ளும் வழிவகைகளை மேற்கொள்ளும் கடப்பாடு எங்களுக்கு உள்ளதென்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடவும் கூடாது.

13 ஜனவரி 2009

இன்றுமுதல் புதிதாய் எனது வலைப்பதிவு - வதீஸின் பிதற்றல்கள்

தற்போது பிரபலமாகவுள்ள வலைப்பதிவைப்பற்றி 2005ம் ஆண்டிலேயே முதன்முதலாக அறிந்து கொண்டேன். ஆனால் அதைப்பற்றி பூரண விளக்கம் அதாவது எப்படி பதிவுகளை இடுவது என்பது பற்றி சிறுஅளவிலேனும் தெரிந்திருக்கவில்லை.ஆனாலும் பிளக்கரில் எனது

பெயரில் ஒரு வலையை ஆரம்பித்தேன். அதன் பின்னர் 2008ம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே இந்த வலைப்பதிவை மீண்டும் ஆரம்பித்து பதிவுகளை இட்டு வருகின்றேன். அதன் ஒரு கட்டமாக பலகாலமாக இருந்த template ஐ மாற்றிவிட்டு புதிதாக ஒரு template ஐ இட்டிருக்கின்றேன். இந்தக் பிதற்றல்களுக்கிடையில் என்னுடைய கணனி அனுபவத்தைபற்றியும் சிறிது சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன்.

நன்றாக நினைவிருக்கின்றது கணனி எனும் வார்த்தையை 90களின் பிற்பகுதியிலேயே நான் கேட்டிருக்கின்றேன். மனிதனுடைய மூளையைவிட மிகவும் திறமையானது என ஆசிரியர்கள் கூறிக் கேட்டிருக்கின்றேன். கணனியை பற்றி பல கற்பனை விவாதங்களைக்கூட நானும் என்னுடைய நண்பர்களும் நடத்தியிருக்கின்றோம். அதன் பிறகு 2000ம் ஆண்டளவில் கணனியை பாடசாலையில்தான் நேரடியாக கண்ணால் பார்த்திருக்கின்றேன். ஆனாலும் கணனியுள் புகுந்து விளையாடவேண்டும் எனும் ஆசை அல்லது ஆர்வம் எனக்குள் இருந்து கொண்டிருந்தது.

நான் யாழ்நகரில் என்னுடைய பெரியப்பாவின் வீடடிலிருந்துதான் கல்வியை கற்றுக்கொண்டிருந்தபடியால் இளவாலையில் இருக்கும் எனது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவைதான் சென்று வருவேன். 2002ம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சையை எழுதிவிட்டு விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது தந்தை மத்திய கிழக்கு நாட்டிலிருந்து விடுமுறையில் வரும்போது ஒரு கணனியை வாங்கி வந்திருந்தார். 2002ம் ஆண்டு மார்கழி மாதம் 20ம் திகதிதான் முதன்முதலாக நான் கணனியை தொட்டுப்பார்த்த நாள். ஆனாலும் அதை எப்படி இயக்குவது என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அப்போது என்னுடைய தம்பிக்கு கணனியில் என்னைவிட சற்று அனுபவம் அதிகம். தம்பியின் வழிகாட்டலில் ஒருமாதிரியாக கணனியை இயக்கி கணனியில் உள்ள சீட்டு(Cards) விளையாட்டைபற்றி அறிந்து கொண்டேன்.(நாசமா போக என்று நீங்கள் கூறுவது விளங்குகிறது) அன்றிலிருந்து கணனி விளையாட்டுக்கள் விளையாடுவதும் படம் பார்ப்பதுமாக கணனியுடன் எனது விடுமுறை கழிந்து கொண்டிருந்தது.

பரீட்சை முடிவுகள் வெளியாகி உயர்தரத்தை தொடர்வதற்காக பெரியப்பாவின் வீட்டுக்கு செல்லவேண்டும். எனக்கோ போகும்பொது கணனியையும் எப்படியாவது கொண்டுபோய்விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் பெரியப்பா தடையாக நின்றார். "கொம்பியூட்டரை இங்க கொண்டுவந்தானென்றால் இவன் இங்க படிக்கமாட்டான் அது அங்கையே இருக்கட்டும்" அப்பாவும் அண்ணனுடைய பேச்சை தட்டாமல நீ போராசா என்று வெறும்கையுடன் அனுப்பி விட்டார்.

அதன் பிற்பாடு எங்களுடை கல்லூரியில் கணனியை ஒரு பாடமாக கற்பித்தார்கள். ஆரம்பத்தில் MS Word அதன்பின்னர் Poweroint அதன்பின்னர் Pascal எனும் கணனி மொழியையும் கற்பித்தார்கள். அன்று கணனியை எனக்கு கற்பித்த கஜன் ஆசிரியரை என்றுமே மறக்க முடியாது. கணனியை பற்றி அனறு நான் வைத்திருந்த எண்ணிலடங்காத சந்தேகங்களை தீர்த்த ஆசான் அவர். தற்போது மாலைதீவில் கணனியை கற்பிப்பதாக அறியமுடிகிறது. அன்றைய காலப்பகுதியில் தான் எனக்கு இணையத்தை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் யாழ் நகரத்தில் அமைந்திருந்த தகவல் தொழிலநுட்ப பூங்காவிலேதான்(IT Park) இணையத்தளத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிட்டியது. யாகூ(Yahoo) தளத்தை முதன்முதலாக பார்த்தது இப்போதும் நன்றாக இருக்கிறது. அதன் பிறகு சிறிது காலத்தில் இணையத்தில் எனக்கென்று இலவச தளமொன்றை(ww.vathees.8m.com) உருவாக்கும் அளவிற்கு சாராசரி அறிவை பெற்றுவிட்டேன். அந்தக் காலப்பகுதியில் தான் வலைப்பதிவு பற்றி எனக்கு தெரிய வந்தது. ஆனாலும் அதைப்பற்றி எனக்கு சரியாகத் தெரியவும் இல்லை. அறிந்திருந்தோரும் அப்போது எனக்குத்தெரிந்தளவில் இல்லை. அதனால் வலைப்பதிவெழுதும் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டேன் ஆனாலும் இணயத்தை பற்றி நிறையவே அறிந்துகொள்ள முற்பட்டேன். எனக்கு தேவையனவரையிலும் அறிந்து கொண்டேன்.

அன்றிலிருந்து இன்றுவரை கணனி சம்மந்தமான பல தகவல்களை பல தேடல்களின் மூலமும் அறிந்தவர்களின் மூலமும் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. கூடுதலாக எனக்கு தொலைக்காட்சி வானொலி போன்ற துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தபடியால் அவற்றுடன் சம்பந்தப்பட்ட மென்பொருட்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதாவது Audio Video Editing மென்பொருட்களை தேடிக் கற்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. தற்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது என்னுடைய வலைப்பதிவைப் பார்க்கும்போது ஒரு பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்து சீரியாக செல்கின்றதுபோல தோன்றுகின்றது. சீரியசை கொஞ்சம் குறைத்தால் மிகவும் நல்லது என கூறும் நண்பர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென

நினைத்திருக்கின்றேன். தொடர்ந்தும் வலைப்பதிவை மெருகேற்றிக் கொண்டு எனக்கு தோன்றுபவை எனக்கு பிடித்தவற்றை தொடர்ந்தும் இந்த வலைப்பதிவின் மூலம் வெளிப்படுத்தவே விரும்புகின்றேன். ஏனென்றால் என் எண்ணங்களை எழுத்துக்களை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் ஒரு பொக்கிஷமாகவே வலையத்தை நான் கருதுகின்றேன். ஒவ்வொரு நாளும் பதிவு இடாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிற்சயமாக பதிவுகளை தமிழில் இடுவேன்.

06 ஜனவரி 2009

இலங்கையில் பிரபல்யமாகி வரும் இரு மொழிப்பாடல்கள்

இன்றைய காலப்பகுதியில் இலங்கையின் இசைத்துறையில் இரு மொழிப் பாடல்கள் மிகவும் பிரசித்தம் பெற்றவையாக விளங்குகிறது.1992 ஜிப்சீஸ் இசைக்குழுவினர் முதன்முதலாக லொவே சமா எனும் இருமொழிப்பாடலை முதன்முதலில் பாடி புதிய வழியை காட்டினர். ஆனாலும் 2001ம் ஆண்டின் பின்னரே இவை போன்ற பாடல்கள் வெளிவந்து பிரபல்யம் அடையத்தொடங்கின.தற்போது இந்தப் பணியில் கிருஷான்,தினேஷ்,கஜன்,இராஜ் போன்றவர்களை முக்கியமாக கூறலாம்.அது பற்றிய ஒரு கதையையே நீங்கள் கீழுழ்ள ஒளிப்பட்த்தில் காணலாம்

அழகுசாதனப் பொருட்களும் பாவப்பட்ட மிருகங்களும்

அழகுசாதனப்பொருட்கள் என்பது மனிதர்களுக்கு இன்றைய காலக்பகுதியில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. மனிதர்களுக்கு என்று கூறுவதைவிட பெண்களுக்கு என்று கூறுவது

சாலச்சிறந்தது. இன்று மேக்கப் இல்லாமல் பெண்கள் வீதியில் நடமாடுவது என்பது சாத்தியம் இல்லாததொன்று எனக்கூறலாம். அதுவும் மனிதர்களுடைய வாழிக்கையுடன் ஒன்றித்துவிட்டதாக மாறியுள்ளது. இந்த அழகு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கூடுதலாக இந்தியாவிலேயே காணப்படுகின்றது. இங்கே அதிகமான நுகர்வு காணப்படுவதே இதற்கான காரணமாகும். ஆனால் இந்த அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் முறையைக்கேட்டால் மிகவும் கொடுமையாக இருக்கிறது. பரிசோதனை எனும் பெயரில் பல உயிர்களைக் கொன்று உருவாக்கப்படும் அழகுசாதனங்களை நாம் பயன்படுத்துகின்றோம் எனும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

புதிதாக ஒரு அழகுசாதனப்பொருளை உற்பத்தி செய்து முதலில் இதை குரங்குகளுக்கு

பரிசோதித்து பார்ப்பதேயாகும். உதாரணத்திற்கு கண் மை அல்லது Eye liner இல் கலக்கப்படும் இரசாயனப் பதார்த்தத்தை முதலில் குரங்குளிலேயே பரிசோதிக்கப்படுகிறது. இவற்றின் கண்களுக்குள் ஊசிளின் மூலமே செலுத்தப்படுகின்றன. குரங்ககள் கண்களை கசக்கிவிடக்கூடாது என்பதற்காக மருந்தை செலுத்தும் முன்பே அவற்றின் கை, கால்கள் கட்டப்படுகின்றன. ஆகவே மருந்தின் வீரியத்தை தாங்கமுடியாமல் அவை வீரிட்டு அழுகின்றன. 12 அல்லது 24 மணிநேரத்தின் பின்னர் மீண்டும் அவற்றை பரிசோதிக்கப்படுகின்றது. அப்போது கண்கள் சீழ் பிடித்து இருக்கும். அல்லது கண்கள் குருடாகியிருக்கும். அந்தளவிற்கு வீரியமான மருந்துகளாக அவை காணப்படுகின்றன.

இந்த முறையானது 1927ம் ஆண்டே முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதை LD 50 Test என்றே அழைக்கப்பட்டது. அதாவது இரசாயனப் பொருட்களின் விஷத்தன்மையை பரிசோதிப்பது என்பதேயாகும். இதன்போது 50 வீதமானவை இறந்துவிட்டன. பின்னர் இரண்டாம் கட்டமாக 1938ம் ஆண்டளவிலே ஆரம்பிக்கப்பட்டது.

இதுபற்றி The American Association for Laboratory Animal Science பின்வருமாறு கூறுகின்றது.
Every year millions of Animals are maimed, Blinded, Scalded, Force-fed Chemical, Genetically mutated and Killed in tha name of Science by private institutions, household products, Cosmetic Companies, government agencies, educational institutions, and Scientific Centers.


மிருகங்களுக்கு பரிசோதிக்கப்பட்டு விற்பனையாகும் பொருட்களுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியதால் தற்போது “மிருகங்களில் பரிசோதிக்கப்படாதது” என லேபிள் பொறித்து பல நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திகளை விற்பனை செய்கின்றன.
மற்றும் ஒரு புறத்தில் மருந்து வகைகளின் தயாரிப்புக்கும் இவ்வாறே பல மிருகங்களை மனிதன் பயன்படுத்தி வருகின்றான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Every year Approximately 17 - 22 Million Animals are used in Research

05 ஜனவரி 2009

எந்திரன் கைமாறியது ஏன்?


அண்மையில் தமிழ் சினிமா உலகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந் நடித்துக்கொண்டிருக்கும் எந்திரன் திபை;படம் கைமாறிய கதை. ஜங்கரன் இன்ரர்னேசினல் நிறுவனம் தயாரித்த அப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அதைப்பற்றி குமுதம் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையைத்தான் கீழே வழங்கியிருக்கிறேன்

எந்திரன்' படத்தைப் பொறுத்தவரை அதன் தயாரிப்பின் பின்னணியில் நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான மினிட்ஸ் என்ன? களத்தில் குதித்தோம்.

பொழுதுபோக்கு உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஈராஸ், ஐங்கரன் நிறுவனத்துடன் கைகோர்த்துப் படத் தயாரிப்பில் இறங்கியது. இதற்குக் காரணம் இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களின் எஃப்.எம்.எஸ்.(ஃபாரின், மலேஷியா, சிங்கப்பூர் என்பதன் சுருக்கம்) எனப்படும் வெளிநாடுகளில் திரையிடும் உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் தற்போதைய ட்ரெண்டான டி.வி.டி.க்கள் செல்ஃபோனில் டவுன் லோட் செய்யும் டிஜிட்டல் உரிமைகளும் ஐங்கரன் வசம் இருப்பதுதான்'' என்கிறார் தமிழ் சினிமாவின் வியாபார செய்திகளை வெளியிடும் `தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட்' டின் ராமானுஜம்.

இதனாலேயே சுமார் இரண்டாயிரம் கோடி வரை ஈராஸ், ஐங்கரன் மூலமாக முதலீடு செய்ததாக கிசுகிசுக்கிறார்கள். இந்நிலையில்தான் `எந்திரன்' படத் தயாரிப்பில் இறங்கின இந்நிறுவனங்கள். உலகம் முழுவதுமே பொருளாதார மந்த நிலையில் தள்ளாட, ஈராஸ் நிறுவனம் ஐங்கரன் இதுவரை தயாரித்த படங்களுக்கான செலவு விவரங்களைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டதாம். இந்தச் சூழ்நிலையில் உருவான சில சிக்கலான விஷயங்களால்தான் ஈராஸ், ஐங்கரனுடனான கூட்டுத் தயாரிப்பிலிருந்து விலக முடிவெடுத்ததாம்.

`எந்திரன்' படத் தயாரிப்பைப் பொறுத்தவரை நூற்றி இருபது கோடி பட்ஜெட் என்று முதலில் சொல்லப்பட்டது. ஷங்கரை பொறுத்தவரையில் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? படம் எப்பொழுது முடிவடையும்? என்ற இரு முக்கியமான கேள்விகளைக் கேட்கக் கூடாதாம் என்ற ரீதியில் தமிழ் சினிமாவில் ஒரு கிசுகிசு வலம் வந்தபடிதான் உள்ளது. ஒரு ஷெட்யூலுக்கு இவ்வளவு பணம் வேண்டுமென்று கேட்டால், அந்த தொகையை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துவிட வேண்டுமாம். பிறகு அதை நிர்வகிப்பது ஷங்கரின் தனி புரொடக்ஷன் டீம்தானாம். ஈராஸ் விலகிய பின்னர் ஐங்கரன் நிறுவனம் இந்த வகையில் இருபத்தியாறு கோடி வரை செலவழித்திருக்கிறதாம்.

இந்நிலையில்தான் `எந்திரனை' நாமே அண்டர்டேக் செய்தால் என்ன? என்ற ரீதியில் ரஜினியும், ஷங்கரும் ஒரு கட்டத்தில் யோசித்ததாகவும் சொல்கிறார்கள். அதேநேரம் அவ்வாறு அண்டர்டேக் செய்தால் தயாரிப்புக்காக பணத்தை முதலீடு செய்வதுடன், படம் முடிந்தபின் வியாபாரம் செய்யும் வரை அந்த டென்ஷனான வேலைகளை நம் தலையில் போட்டுக் கொண்டால் நினைத்த மாதிரி படமெடுக்க முடியாது. அதனால் வேறு தயாரிப்பாளரை அணுகலாம் என இருவரும் முடிவெடுத்தார்களாம்.

இதற்குப் பிறகே சன்பிக்சர்ஸுடன் கைகோர்த்திருக்கிறார்கள். `எந்திரனை' சன்பிக்சர்ஸ் வாங்க முற்பட்டதற்குப் பின்னணியில் சன் டி.வி.க்கும் ஐங்கரனுக்கும் இடையிலான தொழில் போட்டியும் ஒரு காரணமாம். கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டபோது லண்டனிலும், வெளிநாடுகளிலும் அதை ஒளிபரப்பு செய்ய ஐங்கரன் உதவியது. அதனாலேயே தடாலடியாக எந்திரனை கைமாற்ற சன்பிக்சர்ஸ் தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டதாம். இந்த முயற்சி மளமளவென அரங்கேற `எந்திரன்' கைமாறிய விஷயம் அதுபற்றிய செய்தி வெளிவரும் வரை ஐங்கரன் நிறுவனத்திற்கே தெரியாது என்றும் ஒரு ஷாக்கான கிசுகிசு உலாவருகிறது.

எந்திரனை கைமாற்றும் விஷயம் தொடர்பாக பேச ஐங்கரன் கருணாமூர்த்தியை தொடர்பு கொள்ள ரஜினியும், ஷங்கரும் முயன்றிருக்கிறார்களாம். லண்டனில் தனது உறவினர் திருமணத்திற்காக சென்ற கருணா, படத் தயாரிப்பிற்கான பணத்தைக் கேட்கிறார்கள் என போனில் பேசவே இல்லையாம். திருமணம் முடிந்த பிறகு கருணாமூர்த்தி ஷங்கரையும், ரஜினியையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்ய இவர்கள் போனை எடுக்கவே இல்லையாம். இதனால்தான் எந்திரன் கைமாறியது கருணாமூர்த்திக்கு தெரியாமலே போனதாம்.


அதே நேரம் எந்திரன் கைமாறிய விஷயத்தில் சின்ன சிக்கலும் இருப்பதாக முணுமுணுக்கிறார்கள். பொதுவாகவே ஒரு படத்தைத் தயாரிக்கும்போது அப்படத்தின் நெகட்டிவ் உரிமை, லேப் லெட்டர் டைட்டில் உரிமை ஆகியன தயாரிப்பாளரின் பெயரில்தான் இருக்கும். இதை வைத்தே படத்தை வெளியிட முடியும். இவையாவும் ஐங்கரன் நிறுவனத்தின் பெயரில்தான் உள்ளதாம். அதே போல் ஐங்கரனிலிருந்து என்.ஓ.சி. தரப்படவில்லையாம். அதற்கு முதல் தயாரிப்பாளர் இதுவரை செய்த செலவுகளை செட்டில் செய்த பிறகே இந்த என்.ஓ.சி. வழங்கப்படுவது வழக்கம்.

`என்னுடைய சுயநலத்திற்காக நான் எந்த முடிவும் எடுக்கமாட்டேன்' என்று ரஜினியும், ஷங்கரும் இந்த விஷயத்தில் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை என்பதும் ஹைலைட்டான விஷயம். அதே நேரம் சன் பிக்சர்ஸ் சார்பில் இதுவரை ஐங்கரன் செலவு செய்த பணத்தை முழுமையாக செட்டில் செய்ய பேசி வருகிறார்கள். இதற்கு காரணம் `எந்திரன்' சன் பிக்சர்ஸின் நேரடி தயாரிப்பில் வெளிவரும் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற ஐடியாதானாம். ஆனால் ஐங்கரன் நிறுவனமோ தாங்கள் செய்த செலவுடன் சில கோடிகளை சேர்த்து லாபம் கேட்கிறதாம். இதனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டேயிருக்கிறதாம்.

அடுத்தது என்ன? வெயிட் அண்ட் ஸி..

http://www.kumudam.com/magazine/Kumudam/2009-01-07/pg4.php

02 ஜனவரி 2009

ஜனாதிபதியும் ஊடகத்துறையும்


2009 ம் வருடம் ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகி விட்டது.
பத்திரிகைகளில் வான்தாக்குதல்கள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றது. வெற்றியின் பேப்பர் தம்பியும் சலிக்காமல் அவற்றை வாசித்துகொண்டு இருக்கிறார். அதேபோல் இலங்கையின் யுத்த களமுனைகளிலிருந்து வெற்றிச் செய்திகள், சூழுரைப்புக்கள் பலவும் இலங்கை மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மறுமுனையில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனாதிபதியால் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது (இதுதான் இன்று காலை கண்விழித்தவுடன் நான் வானொலிமூலம் தெரிந்து கொண்ட செய்தி) நீண்ட நாட்களாக பலராலும் எதிர்பார்த்த ஒன்றுதான். மேலும் ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி தானே பொறுப்பேற்றுக்கொண்ட செய்தியும் கிடைத்தது. இது பலாராலும் எதிர்பார்க்காத ஒரு முக்கியமான விடயம் தான்.

இலங்கையை ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் காணப்படுகின்ற ஒரு நாடாக மனித உரிமை அமைப்புகளாலும் பல ஊடக அமைப்புக்களாலும் பட்டியலிட்டுவரும் நிலையில் ஜனாதிபதி ஊடக அமைச்சை பொறுப்பேற்றிருப்பதானது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாற்றமானது பலர் மத்தியில் பல எதிர்பார்புக்களை தோற்றுவித்துள்ளது.இனிவரும் காலங்களில் ஜனாதிபதி ஊடகத்துறைக்கு என்ன செய்யப் போகிறார் போன்றவற்றையும் இதனால் ஏற்படப்போகும் அனுகூலங்களை அல்லது பிரதிகூலங்களை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். .

01 ஜனவரி 2009

இனிய புதுவருட வாழ்த்துக்கள்


வலையுலகத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
பிறந்திருக்கும் இந்த புதிய வருடமானது அல்லல்படும் தமிழ் மக்களுக்கு நிதந்தர அமைதியை கொண்டுவரும் ஒரு ஆண்டாக மலர பிரார்த்திப்போமாக

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்

                    இலங்கை   ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   கடந்த   வாரம்   இரண்டு   நாள்   அரசமுறைப்   பயணமாக ஈரான்   நாட்டுக்கு ...